குமரகிரியில் பாலம் கட்ட வலியுறுத்தி சேலம்-சென்னை நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டம்

*1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

சேலம் : சேலம் அம்மாபேட்டை அருகே குமரகிரி பகுதி உள்ளது. இப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதையொட்டி சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

குமரகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், குமரகிரி முருகன் கோயில் மற்றும் குமரகிரிப்பேட்டை உள்ளிட்ட நெடுஞ்சாலையின் மறுபக்கத்தில் உள்ள பகுதிகளுக்கு செல்ல சேலம்-ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க வேண்டியுள்ளது.

இவ்வாறு கடந்து செல்லும் தருணங்களில், பலர் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர். மேலும் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. தற்ேபாது, சன்னியாசிகுண்டு-எருமாபாளையம் பகுதியை இணைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. அதைபோல குமரகிரியிலும் மேம்பாலம் அமைக்கும் பட்சத்தில் விபத்தில்லாமல் எளிதில் கடந்து செல்ல முடியும் என குமரகிரி சுற்றுவட்டார பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நேற்று கோரிக்கையை வலியுறுத்தி, சேலம்-சென்னை தேசிய சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சேலத்தில் இருந்து ஆத்தூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிக்கு சென்ற பேருந்துகள், கனரக வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதுபற்றி தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார், விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கை பற்றி அதிகாரிகளிடம் தெரிவிக்கப்படும் என உறுதி அளித்து சமாதானப்படுத்தினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியலால் அங்கு ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: