சேலம்-உளுந்தூர்பேட்டை 4 வழிச்சாலையில் உடையாப்பட்டியில் உயர்மட்ட மேம்பால பணியை துரிதமாக்க வேண்டும்

*வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

சேலம் : சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில், உடையாப்பட்டியில் நடக்கும் மேம்பாலப்பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உடையாப்பட்டி, நாமமலை, கிச்சிப்பாளையம், எருமாபாளையம், குமரகிரி தனியார் பள்ளி சந்திப்புகள் ஆகிய ஐந்து இடங்களில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. இந்த இடத்தில் சன்னியாசிகுண்டு சந்திப்பில் ரோடு பிரிகிறது.

மேலும் இப்பகுதியில் பள்ளிக்கூடம், ஏராளமான வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கிரஷர்கள் உள்ளன. இதனால் எப்போதும் வாகன நெருக்கும் இருந்து கொண்டே இருக்கும். இதேபோல் அரூரில் இருந்து கோவை மற்றும் நாமக்கல் நோக்கி செல்லும் வாகனங்கள் உடையாப்பட்டி சந்திப்பை அடைந்து தான் செல்கிறது. மேலும் எருமாபாளையம் சந்திப்பில் கிரஷர்கள், பள்ளிகள், லாரி பட்டறைகள் அதிகளவில் உள்ளன.

இந்த பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையை வாகனங்கள் கடக்கும்போது வேகமாக வரும் கார், லாரி உள்ளிட்ட மற்ற வாகனங்கள் மோதிவிடுகிறது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. விபத்துக்களை தவிர்க்க இங்கு மேம்பாலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர்.

இதை பரிசீலித்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முதல்கட்டமாக உடையாப்பட்டி சந்திப்பில் மேம்பாலம் அமைக்க ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து கடந்த ஓராண்டுக்கு முன்பு அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு மேம்பாலப்பணி தொடங்கப்பட்டது. இங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், இந்த பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து சேலத்தை சேர்ந்த வாகன ஓட்டிகள் கூறியதாவது:

சேலம் மாநகர் சீலநாயக்கன்பட்டியிலிருந்து உடையாப்பட்டி சந்திப்பு வரை சாலையில் இருபுறமும் இரட்டை கோயில், திடீர் நகர், சுபாஷ்சந்திரபோஸ், எருமாபாளையம், சன்னியாசிகுண்டு, குமரகிரி, குட்டிகரடு, புதுப்பேட்டை, நாமமலை, சிலோன் காலனி, எருமாபாளையம், ராமனுஜர் கோயில், சன்னியாசிக்குண்டு தர்க்கா, குமரகிரி முருகன் கோயில், நாமமலை பெருமாள் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.

பொதுமக்கள் இச்சாலை கடந்து செல்ல முடியாமல் கடும் துன்பத்திற்குள்ளாகி வருகின்றனர். இது மட்டுமில்லாமல் எருமாபாளையம் சந்திப்பில் தனியார் பள்ளி, அரசு நடுநிலைப்பள்ளி, சன்னியாசிகுண்டு சந்திப்பில் அரசு பள்ளி, தனியார் பள்ளி, உடையாப்பட்டி சந்திப்பில் சார் பதிவாளர் அலுவலகம், தாதகாப்பட்டி சார்பதிவாளர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், மின் பகிர்மான அலுவலகம் ஆகியவை இச்சாலையில் அமைந்துள்ளது. இதில் படிக்கும் மாணவர்கள் தினசரி இச்சாலையை கடந்து செல்ல வேண்டியுள்ளது.

24 மணிநேரமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அசுர வேகத்தில் செல்கிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாகவும், மாநகரின் புறவழிச்சாலையாகவும் மாறியுள்ள இச்சாலையில் விபத்து என்பது அதிகரித்துள்ளது. இச்சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள், குழந்தைகள், மாணவர்கள் தொழிற்சாலை பணியாளர்கள், சிறு, குறு தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இது மரண சாலையாக உள்ளது.

தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் பைபாசில் இருந்து கிச்சிப்பாளையம் சந்திப்பில் இருந்து கலெக்டர் அலுவலகம், பழைய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கிறது. இந்த பகுதிகளுக்கு செல்ல இதுதான் குறுகிய வழியாகும்.

இந்தவழி இல்லை என்றால் எருமாபாளையம் அல்லது சீலநாயக்கன்பட்டி வழியாக தான் பழைய பஸ் ஸ்டாண்டுக்கு வரமுடியும். அதேபோல் அரூர் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், அதேபோல் கோவை, நாமக்கல் பகுதிகளில் இருந்து அரூரை நோக்கி செல்லும் வாகனங்கள் உடையாப்பட்டி சந்திப்பு வழியாக தான் செல்கிறது. இங்கு நான்கு வழி சாலையாக அமைத்ததில் இருந்து இதுவரை ஆயிரக்கணக்கான விபத்துக்கள் நடந்துள்ளது.

இதுவரை 160க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயத்துடன் வாழ்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்புக்கூட சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அருகேயுள்ள தனியார் பள்ளியில் தன்னுடைய குழந்தையை சேப்பதற்கு தாய் மற்றொரு குழந்தையுடன் ஆட்டோவில் வந்தார். அந்த ஆட்டோ மீது லாரி மோதி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபோல் பல சம்பவங்கள் நடந்துள்ளது. உடையாப்பட்டி, கிச்சிப்பாளையம், எருமாபாளையம் ஆகிய சந்திப்புகளில் விபத்தை தவிர்க்க இங்கு மேம்பாலம் அமைப்பது ஒன்று தான் தீர்வாகும் என்று பல்வேறு அமைப்பினர் ஒன்றிய அரசை வலியுறுத்தினர். இதை பரிசீலித்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை உடையாப்பட்டி சந்திப்பில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ஒப்புதல் வழங்கியது.

அங்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு மேம்பாலப்பணிகள் தொடங்கியது. அங்கு தற்போதைய நிலவரப்படி 50 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மேம்பாலப்பணிகள் நடப்பதால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேம்பாலப்பணியை துரிதப்படுத்த வேண்டும்.இவ்வாறு வாகன ஓட்டிகள் கூறினர்.

Related Stories: