பாலியல் வன்முறை, போதை கலாச்சாரத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம்

பெரம்பூர், ஜூலை 13: வியாசர்பாடியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் பாலியல் வன்முறை மற்றும் போதை கலாச்சாரத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடந்தது. அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் பாலியல் வன்முறை, போதை கலாச்சாரம், சாதி மதவெறி இல்லாத தமிழ்நாடு என்ற கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஜூலை 5ம் தேதி முதல் 25ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி நபர்களிடம் கையெழுத்து வாங்கும் நிகழ்வை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக நேற்று காலை வியாசர்பாடி பள்ளத்தெரு பகுதியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாவட்ட தலைவர் கோட்டி சுரேஷ் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடந்தது. அர்ஜுனா விருது பெற்ற பாஸ்கரன் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். குத்துச்சண்டை வீரர் சதீஸ்வர், மருத்துவர் சுரேந்தர், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில செயலாளர் பாரதி, முன்னாள் மாநில தலைவர் வெங்கடேஷ், வேம்புலி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, சமீபகாலமாக தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகள் குறித்தும் போதை கலாச்சாரம் குறித்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர்.

Related Stories: