சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் 41 மின்சார ரயில்கள் ரத்தால் பயணிகள் கடும் அவதி

போரூர், ஜூலை 13: பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம் – செங்கல்பட்டு – சென்னை கடற்கரை மார்க்கமாக நேற்று 41 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் கடற்கரை மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களில் நேற்று 2வது வாரமாக பராமரிப்பு பணி நடைபெற்றதால் காலை 10.45 மணி முதல் மதியம் 3.15 மணி வரை சுமார் 5 மணி நேரத்திற்கு 41 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

இதையொட்டி திருமால்பூர், செங்கல்பட்டில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சிறப்பு ரயில்கள் தாம்பரம் வரை இயக்கப்பட்டது. இதன் காரணமாக சிறப்பு ரயில்களில் வந்து இறங்கிய பொதுமக்கள் தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை, வடபழனி, தி.நகர், கோயம்பேடு, சைதாப்பேட்டை, கிண்டி, விமான நிலையம் போன்ற பகுதிகளுக்கு பயணித்ததால் பேருந்து நிலையங்களில் முண்டியடித்துக் கொண்டு பேருந்துகளில் ஏறி சென்றனர்.
இதனால் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் இரு மார்க்கத்தில் உள்ள பேருந்து நிலையங்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அதிக அளவிலான பொதுமக்கள் பேருந்து நிலையங்களில் கூடியதால் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருப்பினும் வாகன ஓட்டிகள் சிரமம் இன்றி செல்ல போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல ரயில் நிலையத்திலிருந்து, தாம்பரம் பேருந்து நிலையத்திற்கு பயணிகள் படையெடுக்க தொடங்கினர். ஒரே நேரத்தில் அதிக அளவிலான பொதுமக்களின் கூட்டம் தாம்பரம் பேருந்து நிலையத்தில் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பயணிகள் கூறுகையில், பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு மார்க்கத்தில் 41 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பேருந்து நிலையத்தில் வந்ததால் அங்கு கூட்டமாக காணப்பட்டது. பஸ்களில் ஏற முண்டியடித்தனர். பெரும்பாலான வழித்த பேருந்துகள் நிரம்பி வழிந்தன.

Related Stories: