இரவில் தனியாக நடந்துசென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: வணிக வளாக மேற்பார்வையாளர் கைது

 

போரூர், ஜூலை 3: ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ராணி (21, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி, தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் கடந்த 29ம் தேதி ராணி பணிமுடிந்ததும், தனது விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்தொடர்ந்து வந்த நபர், ராணியை வழிமறித்து முகவரி கேட்பது போல் பேச்சு கொடுத்துள்ளார். ராணிக்கு சரியாக தமிழ் தெரியாததால் அவர் ஆங்கிலத்தில் பதில் சொல்லியுள்ளார். அப்போது அந்த நபர் திடீரென ராணியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உதவி கேட்டு சத்தம் போட்டுள்ளார்.

உடனே அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் சம்பவம் குறித்து சூளைமேடு காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்தார். அதன்படி போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போது, சூளைமேடு திருவள்ளுவர்புரம் 2வது தெருவை சேர்ந்த லோகேஷ்ராஜ் (42) என்றும், இவர் தனியார் வணிக வளாகம் ஒன்றில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. மேலும், இவர் ராணி பணி முடிந்து செல்லும் போது தினமும் பின்தொடர்ந்து வந்ததும் விசாரணையில் உறுதியானது.அதைதொடர்ந்து போலீசார், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து லோகேஷ்ராஜை நேற்று கைது செய்தனர்.

 

Related Stories: