சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வது தொடர்பாக ஆளுநரிடம் புகார் டாக்டர் கிருஷ்ணசாமி, தவெக ஒவ்வொரு சனிக்கிழமையும் வாரச்சந்தை நடத்தி அதிமுகவினரைச் சேர்க்கிறது என விமர்சித்துள்ளார். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக தங்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தவெகவில் இணைந்து வருகிறார்கள்.
இந்தச் சூழலில், ராஜினாமா செய்தவர்களை விசாரிக்க வலியுறுத்தியும், அவர்கள் ராஜினாமா செய்ததற்கான விளக்கம் அளித்த பிறகுதான் அந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, நேற்று கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேக்கரைச் சந்தித்துப் புகார் மனு அளித்தார். ஆளுநரைச் சந்தித்த பிறகு நிருபர்களைச் சந்தித்த டாக்டர் கிருஷ்ணசாமி கூறியதாவது:
கடந்த இரண்டு மாதமாகத் தவெக தேர்தலில் எந்தக் கட்சிகளை எதிர்த்துப் போட்டியிட்டதோ அந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை ஒவ்வொருவராக ராஜினாமா செய்ய வைத்து, அவர்களைத் தவெகவில் இணைய வைக்கும் செயல் நடந்து வருகிறது. கட்சித்தாவல் தடைச்சட்டம் பாய்வதைத் தடுக்க வாரம் ஒருவர் என்ற வகையில் அதிமுகவில் இருந்து 6 பேர் ராஜினாமா செய்துள்ளார்கள்.
வழக்கமாக ஆளும்கட்சி ஆட்சியைத் தக்க வைக்க, இன்னொரு கட்சியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்கள் பக்கம் இழுத்தால் அது குதிரை பேரம். ஆனால், இப்போது அந்தக் குதிரை பேரத்தை வித்தியாசமாகச் செய்கிறார்கள். ஒரு சட்டமன்ற உறுப்பினர் திடீரென ராஜினாமா செய்துவிட்டுத் தவெகவில் இணைகிறார்; இது குதிரை பேரம்தான். இதைக் குதிரை பேரமாகக் கருதி அந்தச் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் இவர்கள் ராஜினாமா செய்த இடத்தில் தேர்தல் வரக்கூடாது என்ற முக்கியமான கோரிக்கையை முன்வைத்து ஆளுநரிடம் மனு அளித்துள்ளேன்.
அப்போது ஆளுநர், ‘‘ஆளுநராக நான் என்ன செய்ய முடியும்’’ எனக் கேட்டார். ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது; அவர்களுக்குச் சம்மன் அளித்து, என்ன காரணங்களுக்காக ராஜினாமா செய்தார்கள் என விசாரியுங்கள். ஆசை வார்த்தை கூறியதன் அடிப்படையில்தான் அவர்கள் அந்தக் கட்சிக்குப் போகிறார்கள். எனவே நீங்கள் விசாரணைக்கு உத்தரவிடுங்கள் எனத் தெரிவித்தேன். வாரம் ஒரு சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்தால் தேர்தல் ஆணையத்திற்கு இடைத்தேர்தல் நடத்தாத்தான் நேரம் இருக்கும்;
வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியாது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சட்டமன்ற வளாகத்திற்குள் அதிகாரம் பெறாத ஜான் ஆரோகியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி போன்றவர்களிடம் ஐஏஎஸ் அதிகாரிகள் பதிலளிக்கும் நிலைக்குச் சென்றுள்ளது ஆபத்தானது; அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தேன். தமிழகத்தில் ஜனநாயகத்தை விரும்பும் அனைவரும் இந்தக் குதிரை பேரத்தைக் கண்டிக்க வேண்டும். ராஜினாமா செய்பவர்கள் அனைவரும், தூண்டப்பட்டு ஆதாயத்திற்காக மட்டுமே ராஜினாமா செய்கிறார்கள்.
ஆதவ் அர்ஜுனா 90 சதவீத அதிமுகவினர் தவெகவுக்கு வந்துவிடுவார்கள் எனச் சொல்வதன் பொருள் என்ன? ஒவ்வொரு சனிக்கிழமையும் வாரச்சந்தை நடத்தி அதிமுகவினரைத் தவெகவில் சேர்ப்பதன் பொருள் என்ன? ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்பதால், மற்ற கட்சியைக் கரைப்பது ஜனநாயக விரோதம். ஊழலை ஒழிப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் ஊழல் செய்தவர்களைத் தேடித் தேடிச் சேர்க்கிறார்கள். இவர்கள் எப்படித் தங்களை ஊழலுக்கு எதிரான சக்தியாகக் காட்டிக்கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
