ராட்சத குழாயை தூக்கி வந்தபோது கிரேன் ரோப் அறுந்து விழுந்து 3 வயது சிறுவன் பரிதாப பலி: தந்தை கண்முன்னே நடந்த சம்பவம்

புழல்: ராட்சத குழாயை தூக்கி வரும்போது கிரேன் ரோப் அறுந்துவிழுந்து சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். தந்தையின் கண்முன்னே இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில், புழல் அடுத்த காவாங்கரை கண்ணப்பசாமி நகர் பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் பாதாள சாக்கடை குழாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கண்ணப்பசாமி நகர் 24வது தெருவில் ராட்சத கழிவுநீர் குழாய் புதைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கிரேன் இயந்திரம் மூலம் ராட்சத குழாயை தூக்கிவந்து பள்ளத்தில் வைக்க முயற்சி செய்தபோது எதிர்பாராதவிதமாக ரோப் கயிறு அறுந்ததில் அதில் இணைக்கப்பட்டிருந்த பெரிய கழிவுநீர் குழாயும் கீழே விழுந்துள்ளது.

அந்த சமயத்தில், கண்ணப்பசாமி நகர் 1வது தெருவை சேர்ந்த விக்னேஷ் என்பவர் தனது 3 வயது மகன் ஷருக் ஈஸ்வரனுடன் கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தபோது சிறுவன் மீது தகடு விழுந்ததில் படுகாயம் அடைந்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தை கதறிஅழுததுடன் உடனடியாக மகனை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்று முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார். இதன்பின்னர் அங்கிருந்து மாதவரம் ரவுண்டானா அருகில் உள்ள தனியார் மருத்துவமனை சேர்த்து அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணி அளவில் சிறுவன் பரிதாபமாக இறந்தான். இதுபற்றி அறிந்ததும் மருத்துவமனை முன்பு சிறுவனின் உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிறுவனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுசம்பந்தமாக புழல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து கிரேனை இயக்கிய உரிமையாளரை புழல் காவல்நிலையம் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: