பாடகி எஸ்.ஜானகி மறைவுக்கு ரஜினி, கமல் இரங்கல்

சென்னை: பாடகி எஸ்.ஜானகி மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்த்: தன்னுடைய தேனமுத குரலால் தலைமுறை, தலைமுறையாக மக்களை மகிழ்வித்த ஜானகி அம்மாவின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

கமல்ஹாசன்: பாடல் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த அன்பை எங்கு தேடுவேன் அம்மா? இறக்கி வைக்க முடியாத சோகம் பலருக்கும் இருக்கும். அவர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.

கவிஞர் வைரமுத்து: கானக் குயிலே காலமானாயா? அரை நூற்றாண்டு ஆறுதலே அடங்கிவிட்டாயா? ‘சிங்கார வேலனே தேவா’வில் நாதஸ்வரத்தை வென்றுகாட்டிய கீதவாணியே முடிந்துவிட்டதா உன் மூச்சு? கண்ணதாசன் எழுதி நீ பாடிய பல்லவி கொண்டே புகழ்வணக்கம் செலுத்துகிறேன். ‘தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே… அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே… வாழ்க நீ அம்மா.

நடிகை சிம்ரன்: சில குரல்கள் நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாக என்றென்றும் நிலைத்துவிடுகிறது. ஜானகி அம்மாவின் குரலும் அத்தகையதே. அவரது பாடல்கள் நம் இதயங்களில் என்றென்றும் வாாழ்ந்து கொண்டிருக்கும். அவரது அன்புக்குரியவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அம்மா, அமைதியில் துயில்கொள்ளுங்கள். ஓம் சாந்தி.

இசை அமைப்பாளர் அனிருத்: ஜானகி அம்மா, அமைதியில் துயில் கொள்ளுங்கள். உங்கள் ஆசீர்வாதங்களை என்றென்றும் நினைவுகூர்வேன்.

பாடகி சின்மயி: அவர் ஒரு தேவி. 23 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஜானகி அம்மாவுடன் பாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர் மேடையில் நேரடியாக ஒரு பாடலை பாடினார். அதில் அவரின் குரல் ஒரு குழந்தை போலவும், ஒரு பெண் போலவும், ஒரு ஆண் போலவும் ஒலித்தது.

நான் மேடைக்கு பின்னால் இருந்தேன். அந்த பாடலை முழுவதுமாக பாடுவது அவர்தான் என்று தெரிந்துகொள்ளும் வரை, அந்த ஆண் பாடகர் யார் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். மலையாளம், கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கில் அவரது பங்களிப்புகள், நான் மிகவும் மதிக்கும் ஒரு பாடகி அவர். ஒருவேளை அங்கே அவர் முருகனுக்கு சிங்கார வேலனே தேவனாக இருப்பார்.

Related Stories: