அண்ணாநகர்: பாடி, கொரத்தூர், முகப்பேர், அம்பத்தூரில் கோயில், தேவாலயங்கள், பள்ளி அருகே செயல்படும் டாஸ்மாக் கடையை மூட வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றதும் கோயில், பள்ளி, தேவாலயம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும், என அறவித்தார். அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக டாஸ்மாக் அதிகாரிகள், டாஸ்மாக் கடைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், சில இடங்களில் இவ்வாறு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. ஆனால், பல இடங்களில் கோயில், பள்ளி, மருத்துவமனை அருகில் தற்போது வரை டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் கொரட்டூர் பத்திரப்பதிவு அலுவலகம் எதிரே தேவாலயம் மற்றும் பள்ளி அருகில் உள்ள டாஸ்மாக் கடை இதுவரை மூடப்படவில்லை.
இங்கு, தினமும் குடிமகன்கள் மது அருந்திவிட்டு சாலைகளில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் தகராறில் ஈடுபடுகின்றனர். மேலும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த தேவாலயத்திற்கு அதிக அளவில் பொதுமக்கள் வரும்போது குடிமகன்கள் இடையூறு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதேபோல், பாடி மேம்பாலத்தில் இருந்து மாதவரம் செல்லும் வழியில் டி.வி.எஸ் லூகாஸ் மேம்பாலம் இறங்கும் இடத்தில் இடதுபுறம் தேசிய நெடுஞ்சாலை ஒட்டி தேவாலயம் உள்ளது. இதன் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் தினசரி மது அருந்திவிட்டு வரும் போதை ஆசாமிகளால் தொடர் விபத்துகள் ஏற்படுகிறது. இந்த டாஸ்மாக் கடையை தாண்டிதான் அதன் அருகில் உள்ள திருச்சபைக்கு பொதுமக்கள் மற்றும் திருச்சபை ஊழியர்கள் செல்ல வேண்டும். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையில் பங்கு கொள்கின்றனர்.
அதுபோன்ற நேரங்களில் இங்குள்ள குடிமகன்களால் திருச்சபைக்கு வரும் கிறிஸ்தவர்கள் சிரமப்படுகின்றனர்.இதேபோல், மண்ணூர்பேட்டை பேருந்து நிலையம் அருகே, சி.டி.எச் சாலையில் சர்ச் எதிரில் ஒரு கடையும், அம்பத்தூர், கள்ளிக்குப்பம் அருகே தனியார் பள்ளியை ஒட்டி டாஸ்மாக் பாரும் அமைந்துள்ளன. தினசரி பள்ளி செல்லும் மாணவர்கள், குடிமகன்களின் அத்துமீறலால் அவதிக்குள்ளாகின்றனர்.
இதேபோல், முகப்பேர் மேற்கு பகுதி பேருந்து நிலையம் அருகே கோயிலை ஒட்டி டாஸ்மாக் கடையும், அம்பத்தூரில் தனியார் மருத்துவமனை அருகிலும் உள்ள டாஸ்மாக் கடைகளை இதுவரை மூடாத அதிகாரிகள், மேற்கண்ட டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டதாக அரசுக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘இந்த புதிய அரசு அமைந்த உடன் பள்ளி, கோயில், மருத்துவமனை அருகே செயல்படும் 717 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக அறிவித்தது. ஆனால் அம்பத்தூர், முகப்பேர், பகுதியில் எந்த கடைகளையும் மூடியதாக தெரியவில்லை. பள்ளி, கல்லூரி, மசூதி என அனைத்து இடங்களிலும் ஏற்கனவே செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் அப்படியே இயங்குகிறது. அப்படியானால் அம்பத்தூரில் எந்த கடைகள் மூடப்பட்டன என்று பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இல்லை என்றால் மூடியதாக அரசுக்கு கணக்கு காண்பித்து விட்டு டாஸ்மாக் அதிகாரிகள் அரசை ஏமாற்றினார்களா என்று தெரிய வேண்டும்,’ என்றனர்.
