கன்னியாகுமரியில் மிடாலம் கடற்கரையில் சொகுசு ஜீப்பை ஓட்டி வாலிபர்கள் சாகசத்தில் ஈடுபட்டபோது, வாகனம் கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு

 

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள மிடாலம் கடற்கரையில் சொகுசு ஜீப்பை ஓட்டி வாலிபர்கள் சாகசத்தில் ஈடுபட்டபோது, வாகனம் கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மிடாலம் கடற்கரை பகுதிக்கு வந்த சில வாலிபர்கள் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் தங்களது விலையுயர்ந்த சொகுசு ஜீப்பை டார் வாகனத்தை மணற்பரப்பைக் கடந்து, அலைகள் வந்து செல்லும் கடல் எல்லைக்கு மிக அருகில் கொண்டு சென்று அதிவேகமாக ஓட்டி சாகசம் செய்துள்ளனர். சீறிப்பாய்ந்த கடல் அலைகளின் ஈரப்பதம் காரணமாக, ஜீப்பின் சக்கரங்கள் திடீரென கடற்கரை மணலில் ஆழமாகப் புதைந்து மாட்டிக்கொண்டன.

வாலிபர்கள் வாகனத்தை எடுக்க முயன்றும் முடியாத நிலையில், அடுத்தடுத்து வந்த கடல் அலைகள் சொகுசு ஜீப்பை கடலுக்குள் இழுத்துச் செல்லத் தொடங்கின. அதிர்ஷ்டவசமாக வாகனத்தில் இருந்த வாலிபர்கள் அலையில் சிக்காமல் உடனடியாக வெளியேறி உயிர் தப்பினர். தகவலறிந்து வந்த உள்ளூர் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கயிறுகளைக் கட்டி, கடலுக்குள் மூழ்கிக்கொண்டிருந்த சொகுசு ஜீப்பை பத்திரமாக மீட்டனர்.

தடைசெய்யப்பட்ட கடற்கரை மணற்பரப்பில் ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டி சாகசம் செய்தது மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இது போன்ற ஆபத்தான அலைகள் நிறைந்த கடலோரப் பகுதிகளில் சாகசங்களில் ஈடுபடக் கூடாது என கடலோரப் பாதுகாப்புப் படையினரும் போலீசாரும் எச்சரித்துள்ளனர்

Related Stories: