சென்னை: வி தி லீடர்ஸ்’ இயக்க தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பதிவு: கரூர் மாவட்டத்தில் 3,084 ஏக்கர் நிலங்கள் தொடர்பாக எழுந்துள்ள விவகாரத்தில் உண்மை நிலையை, சட்டரீதியாகப் புரிந்துகொள்வது அவசியம். இங்கு பேசுபொருளாகியிருக்கும் அனைத்து நிலங்களும்”திருக்கோயில் சொத்துகள்” என்றல்ல; பெரும்பாலானவை இனாம் நிலங்கள் தொடர்பானவை.
ஆலயங்களில் பணியாற்றிய அர்ச்சகர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு விஜயநகரப் பேரரசு மற்றும் பிற ஆட்சியாளர்களால் மானியமாக வழங்கப்பட்ட இனாம் நிலங்கள், பின்னர் தமிழ்நாடு இனாம் (ரத்து மற்றும் ரயத்வாரியாக மாற்றுதல்) சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு, தகுதியுடையவர்களுக்கு ரயத்வாரி பட்டாக்கள் வழங்கப்பட்டன.
தவெக அரசின் நடவடிக்கை, சட்டப்படி ஏற்கனவே ரயத்வாரி பட்டா பெற்ற இனாம் நிலங்களின் மீதான பதிவு தடையை நீக்கி, அந்த விவசாயிகளின் சட்டப்பூர்வ உரிமையை மீட்டெடுப்பதற்கானதாக இருந்தால் வரவேற்க வேண்டியதே தவிர, கோயில் நிலங்களை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு வழங்கும் நடவடிக்கையாக சித்தரிப்பது தவறான புரிதலை ஏற்படுத்தும். அதே நேரத்தில், உண்மையான கோயில் சொத்துகள் எதுவும், சட்டவிரோதமாக தனியாருக்கு மாற்றப்பட கூடாது என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.
கோயில் சொத்துகளை பாதுகாப்பதும், சட்டப்படி உரிமை பெற்ற விவசாயிகளின் உரிமையை பாதுகாப்பதும் அரசின் பொறுப்பாகும். எனவே, சட்டப்பூர்வமாக ரயத்வாரி பட்டா பெற்ற இனாம் நிலங்களின் உரிமையை உறுதி செய்யும் தமிழக அரசின் நடவடிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம். இது ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், பல ஆண்டுகளாக நிலவி வந்த பதிவுச் சிக்கல்களையும் தீர்க்கும் ஒரு முக்கியமான நடவடிக்கை.
