அனைவருக்குமான ஆட்சி என்று கூறிக்கொண்டு இந்து மதத்தின் மீது வெளிப்படையாக ஒவ்வாமையை காட்டுவதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்

சென்னை: அனைவருக்குமான ஆட்சி என்று கூறிக்கொண்டு இந்து மதத்தின் மீது மட்டும் இப்படி வெளிப்படையாக ஒவ்வாமையை காட்டுவதா என்று தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: கரூரில் நடந்த விழாவில் “பிரைஸ் த லார்ட், அஸ்ஸலாமு அலைக்கும்” என்று பிற மதத்தினரின் கடவுள்களை வணங்கிவிட்டு, இந்துக் கடவுள்களை வேண்டுமென்ற ஒதுக்கிய, உங்களைப் போன்ற இந்துமத வெறுப்பாளர்கள் உள்ளவரை, “மதநல்லிணக்கம்” என்பது சமூகத்தில் மருந்திற்கும் படராது.

“அனைவருக்குமான ஆட்சி” என்று கூறிக்கொண்டு இந்து மதத்தின் மீது மட்டும் இப்படி வெளிப்படையாக ஒவ்வாமையை காட்டுவது கடும் கண்டனத்திற்குரியது. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது. நயினார் நாகேந்திரனின் மற்றொரு பதிவில், ‘சென்னை நகர், புறநகர் பகுதிகளில் பேருந்தில் பயணிக்கும் லட்சக்கணக்கான மக்கள், பேருந்து நிலையங்கள் இல்லாமலும், நிழற்குடைகள் இல்லாமலும் வெட்டவெளியில் நின்றுகொண்டு இருப்பது தினசரி நாம் கண்கூடாக காணும் காட்சிகளாக இருக்கின்றன.

ஒவ்வொரு பேருந்து நிலையங்களிலும் குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தி தரவும், தவெக அரசின் முதல்வர் ஜோசப் விஜய், இனியும் தாமதிக்காமல், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

* எல்லா துறைகளிலும் லஞ்சம்
சென்னை: தவெக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் என நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.  தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார். அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது: கரூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 3,085 ஏக்கர் நிலத்தை தனியாருக்கு தாரைவார்த்து கொடுத்துள்ளனர்.

‘எங்கள் ஆட்சியில் லஞ்சம் இல்லை’ என முதல்வர் விஜய் கூறியுள்ளார். எனினும், தவெக ஆட்சியில் அனைத்து அரசு துறைகளிலும் லஞ்சம் கொடுப்பதை ஆரம்பித்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்ப வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்குவதில் எங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. அதே நேரத்தில் பல துறைகளில், வாரிசு அடிப்படையில் பலருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட வேண்டியுள்ளது.

அவர்களுக்கு கொடுத்துவிட்டு, பிறகு கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு கொடுத்தால்தான் சரியாக இருக்கும். கரூரில் முதல்வர் விஜய்யின் பேச்சு, இந்துக்களின் மனம் புண்படும்படியாக அமைந்திருப்பது மிகுந்த வேதனையாக உள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது கரூர் கூட்டத்துக்கு மதியம் 12 மணிக்கு வருகிறேன் என கூறிவிட்டு, அன்றிரவு 7 மணியளவில் ஏன் விஜய் வருகை தந்தார்? அதன் காரணமாகத்தான் கரூரில் இத்தகைய மனித உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: