சென்னை: அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சி துறை அமைச்சராக பதவி வகித்த போது, சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் 98 கோடியே 25 லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு பிறப்பித்திருந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு எதிராக அறப்போர் இயக்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கந்தசாமி, விஜய கார்த்திகேயன் ஆகிய இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரி 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் அனுப்பிய கடிதம் இன்னும் மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, விசாரணையை ஜூலை 17ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். முன்னதாக வழக்கு விசாரணையின்போது, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஊழலை ஒழிப்பதாக மைக் முன் அனைவரும் பேசுகின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. தங்களை தொட முடியாது என்று அனைத்து அரசியல்வாதிகளுக்கும் தெரியும். குற்றம் நடந்து ஐந்து ஆண்டுகள் முடிவடைந்துவிட்டன. அடுத்த தேர்தலும் நடந்து விட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை மக்கள் மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.
