சென்னை: இதயம் முரளி படத்திற்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், பிரச்னையை மத்தியஸ்தர் மூலம் தீர்த்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த பராசக்தி திரைப்படம் கடந்த ஜனவரி 9ம் தேதி வெளியானது. படத்தை இயக்க சுதா கொங்கராவிற்கு 15 கோடி ரூபாய் ஊதியம் ஒப்பந்தம் செய்த நிலையில், 8.39 கோடி ரூபாய் ஊதிய பாக்கி வைத்துள்ளதாகவும், அந்த தொகையை செலுத்த கோரியும் சுதா கொங்கரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இதயம் முரளி படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். பராசக்தி படத்தின் உரிமையை மூன்றாம் நபருக்கு வழங்க தடை விதிக்க வேண்டும் என்றும், பராசக்தி படத்தை ஓடிடி தொலைக்காட்சி உரிமம் வழங்கியதன் மூலம் கிடைத்த வருமானத்தின் முழு விவரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, இதயம் முரளி படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டார். இந்த பிரச்னையை மத்தியஸ்தர் மூலம் தீர்த்துக் கொள்ளுமாறு இயக்குனர் மற்றும் படத்தின் தயாரிப்பாளருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
