சென்னை: அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டிலுள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 125 கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஒட்டுமொத்தக் கல்லூரிகளில் 69 சதவீதம் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக இருப்பது கல்லூரிகளின் சீரழிவுக்கு தான் வழிவகுக்கும்.
கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்களை நிரப்புவது என்பது கடினமான பணி அல்ல. கல்லூரி முதல்வர்கள் பணி மூப்பு அடிப்படையில் தான் நியமிக்கப்படுகிறார்கள். கல்லூரி ஆசிரியர்களின் பணி மூப்புப் பட்டியல் தயார் நிலையில் உள்ளது. அதன் அடிப்படையில் ஒரே நாளில் அனைத்துக் கல்லூரிகளுக்கும் முதல்வர்களை நியமிக்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் ஓய்வு பெறும் முதல்வர்கள் யார், யார் என்பது அரசுக்கு முன்கூட்டியே தெரியும்.
ஆனாலும், அவற்றை நிரப்ப கடந்த ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. அதற்கான காரணங்களும் தெரியவில்லை. புதிய ஆட்சியிலும் அதே நிலை தொடரக்கூடாது. முதல்வர்கள் இல்லை, ஆசிரியர்கள் இல்லை என்பதற்காக அவை சீரழிவதை அனுமதிக்கக் கூடாது. எனவே, 125 அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும். இவ்வாறு கூறி உள்ளார்.
