சென்னை: சென்னையில் பார்க்கிங் தட்டுப்பாடு பிரச்னையால் சென்னை மக்கள் அவதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில், நாளுக்கு நாள் பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் பார்க்கிங் (வாகன நிறுத்துமிடம்) தட்டுப்பாடு என்பது பொதுமக்களுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. சென்னையின் முக்கியப் பகுதிகள் முதல் புறநகர்ப் பகுதிகள் வரை எங்கு பார்த்தாலும் சாலைகளிலும் தெருக்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் அவல நிலை நீடித்து வருகிறது. அரசு தரப்பில் சாலைகளை அகலப்படுத்துதல், புதிய மேம்பாலங்களைக் கட்டுதல் போன்ற உள்கட்டமைப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டாலும், குறுகிய தெருக்களில் வசிக்கும் மக்களுக்கு இதனால் எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை.
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், அதற்கேற்ற பார்க்கிங் வசதிகள் பல இடங்களில் இல்லை. இதனால் வேறு வழியின்றித் தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களைச் சாலைகளிலேயே நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு வாகன உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து வாடகை வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில், “சொந்தமாக வீடு வைத்திருப்பவர்கள் ஓரளவிற்குப் பார்க்கிங் வசதியோடு பாதுகாப்பாக வாகனங்களை நிறுத்தி விடுகிறார்கள். ஆனால், எங்களைப் போன்ற வாடகைதாரர்கள் வண்டிகளைத் தெருவிலேயே விட வேண்டியுள்ளது.
இரவு நேரங்களில் லாரி மற்றும் கனரக வாகனங்கள் செல்லும்போது வண்டிகள் மீது இடித்துச் சேதப்படுத்தி விடுமோ அல்லது வாகனங்கள் திருடப்பட்டு விடுமோ என்ற பயத்திலேயே தினமும் தூக்கத்தைத் தொலைக்கிறோம் என்று தங்களது குமுறல்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். சென்னையில் புறநகர் மின்சார ரயில், மெட்ரோ ரயில், மாநகரப் பேருந்துகள், ஆட்டோக்கள் மற்றும் பைக் டாக்ஸிகள் எனப் பல்வேறு பொதுப் போக்குவரத்து வசதிகள் இருந்தாலும், சொந்தமாக வாகனம் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே அதிக வாகனங்கள் கொண்ட நகரங்களின் பட்டியலில் சென்னை இரண்டாம் இடத்தில் உள்ளது.
கடந்த ஆண்டு சென்னையில் 54 லட்சம் வாகனங்கள் பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 20 லட்சம் வாகனங்கள் பதிவாகியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வீட்டுக்கு ஒரு வண்டி என்ற நிலை மாறி, ஆளுக்கொரு இருசக்கர வாகனம் மற்றும் கார்களை வாங்கும் போக்கு அதிகரித்துள்ளது. ஆனால், அவையனைத்தையும் எங்கே நிறுத்துவது என்ற கேள்விக்குத்தான் இன்னும் விடை கிடைக்கவில்லை. தி.நகர், திருவல்லிக்கேணி போன்ற மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் வணிக வளாகங்களுக்கு வருவோர் வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
அனைவருக்கும் பொதுவான சாலையில் வாகனங்களை நிறுத்தி, மற்றவர்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவது அத்துமீறல் என்று சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த பார்க்கிங் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த விவகாரத்தில் அரசு உரிய தலையீடு செய்து, பொது பார்க்கிங் மையங்களை அதிகளவில் உருவாக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த சென்னைவாசிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
