×

ஊசலாடும் உயர்கல்வித் துறையை காங்கிரஸ் அமைச்சர் கண்டுகொள்வாரா?.. நயினார் நாகேந்திரன் கேள்வி

 

சென்னை: ஊசலாடும் உயர்கல்வித் துறையை காங்கிரஸ் அமைச்சர் கண்டுகொள்வாரா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளம் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 125 கல்லூரி முதல்வர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகளை ஆளும் தவெக அரசும், உயர்கல்வித் துறை அமைச்சரான விஸ்வநாதனும் சற்று கவனமாக கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு காலத்தில் அரசு கல்லூரிகளில் இடம் கிடைப்பது, மிகப்பெரும் சாதனையாகவும், வளமான எதிர்காலத்திற்கான திறவுகோலாகவும் கருதப்பட்டது.

ஆனால், தற்போது தகுதியான ஆசிரியர்கள், தரமான கட்டிடங்கள், நவீன ஆய்வகங்கள், கழிவறைகள் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத அரசு கல்லூரிகளை தேர்ந்தெடுக்க யாரும் விரும்புவதில்லை என்பதே கசப்பான உண்மை. கட்டணம் அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என அரசு கல்விக் கூடங்களை நிராகரித்து விட்டு, மக்கள் தனியார் கல்வி நிலையங்களை நோக்கி படையெடுப்பது, அரசு இயந்திரத்திற்கே அவமானம். எனவே, சுமார் அரை நூற்றாண்டிற்கு பிறகு தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் விஸ்வநாதன், கொஞ்சம் கொஞ்சமாக உருக்குலைந்து கொண்டிருக்கும் உயர்கல்வித் துறையை உயர்த்துவதில் கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Congress ,Minister ,Nainar Nagendran ,Chennai ,Congress Minister ,Tamil Nadu ,BJP ,
× RELATED நீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்