சென்னை: தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் 2022ல் புதுச்சேரியில் வசிக்கும் தனது சகோதரர் மரிய குலோத் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று மரிய குலோத், அவரது மனைவி கெரோலினை தாக்கியதாக லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றம் குற்றப்பத்திரிகை நகலை பெற நேரில் ஆஜராக உத்தரவிட்டும் மரிய வில்சன் தொடர்ந்து ஆஜராகவில்லை. இதனால் ஜூலை 10ம் தேதி (இன்று) கட்டாயம் ஆஜராக மரிய வில்சனுக்கு புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், நீதிமன்றத்தில் ஆஜராக விலக்குக் கோரியும் மரிய வில்சன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு, நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. மரிய வில்சன் தரப்பில் வக்கீல் காஜா முகைதீன் கிஸ்தி ஆஜராகி, குடும்ப பிரச்னை தொடர்பாக சமரசம் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார்.புதுச்சேரி அரசு வக்கீல், அமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரும் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
நீதியின் போக்கை தடுக்கும் எண்ணத்துடன் மரிய வில்சன் மனுதாக்கல் செய்துள்ளார் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி, உயர் நீதிமன்ற சமரச தீர்வு மையத்துக்கு வழக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கு ஜூலை 13ம் தேதி அமைச்சர் மரியவில்சன், அவரது தந்தை மற்றும் சகோதரர், சகோதரரின் மனைவி ஆஜராக வேண்டும். அதேசமயம், புதுச்சேரி நீதிமன்றத்தில் ஜூலை 10ம் தேதி (இன்று) நேரில் ஆஜராவதில் இருந்து அமைச்சருக்கு விலக்களிக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.
