* ரூ.15,037 கோடி முதலீடு உடனே தமிழகம் வருவதாக பொய்யான தோற்றம் தருவதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி
சென்னை: நெல்லை கங்கை கொண்டான் சிப்காட் வளாகத்தில் கடந்த திமுக ஆட்சியில் முதலீடு உறுதி செய்து அடிக்கல் நாட்டப்பட்ட நிறுவனம் விக்ரம் சோலார். அதே நிறுவனத்தின் முதலீட்டு திட்டத்தையே தவெக அரசு புதிய முதலீடாக மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்தியுள்ளது. மேலும் ரூ.15,037 கோடி முதலீடு உடனே தமிழகம் வருவதாக பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு நிதி கழகமான டிஎப்சி (DFC) மூலம் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி பெற்று, திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உற்பத்தி ஆலை அமைக்க விக்ரம் சோலார் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. அதன் பிறகு, 2025 பிப்ரவரி 5ம் தேதி, ரூ.3,800 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்ட டாடா குழுமத்தின் சோலார் உற்பத்தி ஆலையை அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதே நிகழ்வில் ரூ.3,125 கோடி முதலீட்டில் விக்ரம் சோலார் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. சுமார் 6,500 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், நேற்று சென்னை தலைமை செயலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில், திருநெல்வேலி கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் ரூ.15,037 கோடி முதலீட்டில் விக்ரம் சோலார் நிறுவனம் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் உற்பத்தி ஆலையை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக தவெக அரசு அறிவித்துள்ளது.
தவெக அரசின் இந்த அறிவிப்பை பார்த்தால், ரூ.15,037 கோடி முதலீடு உடனடியாக தமிழகம் வரப்போகிறது என்ற தோற்றம் உருவாகிறது. ஆனால், தொழில்துறை வட்டாரங்களில் அதற்கு மாறாக பேசப்படுகிறது. விக்ரம் சோலார் நிறுவனத்தின் முதலீடு ஒரே கட்டமாக நடைபெறவில்லை. பல ஆண்டுகளாக பல கட்டங்களாக செயல்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, 2026ம் ஆண்டில் ரூ.800 கோடி, 2027ம் ஆண்டில் ரூ.1,200 கோடி, 2028ம் ஆண்டில் ரூ.1,300 கோடி, 2029ம் ஆண்டில் ரூ.1,071 கோடி என ஆரம்ப கட்டங்களில் மொத்தம் ரூ.4,371 கோடி அளவிலான முதலீடு மட்டுமே திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்பிறகு ஒவ்வொரு கட்ட முதலீடும் நிறுவனத்தின் பணப்புழக்கம், சந்தை மதிப்பு உள்ளிட்ட காரணிகளைப் பொறுத்தே முன்னேறும். அதாவது, ரூ.15,037 கோடி என்பது உடனடியாக வரவிருக்கும் முதலீடு அல்ல. நீண்டகால இலக்கு முதலீட்டு மதிப்பாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அதேபோல், விக்ரம் சோலார் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.7,000 கோடி இருக்கும் நிலையில், ரூ.15,037 கோடி முதலீடு எவ்வாறு சாத்தியமாகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதுகுறித்து தொழில்துறை நிபுணர்கள் கூறுகையில், ‘‘ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பை விட அதிக மதிப்புள்ள திட்டங்களை மேற்கொள்வது இயலாதது. வங்கி கடன், வெளிநாட்டு முதலீடு, பங்குதாரர் முதலீடு, திட்ட நிதியுதவி, கூட்டாண்மை முதலீடு போன்ற பல்வேறு வழிகளில் நிறுவனங்கள் பெரிய முதலீடுகளை மேற்கொள்வது உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ளது. எனினும், இந்த திட்டத்திற்கு நிதி எங்கிருந்து வர உள்ளது, எந்த ஆண்டில் எவ்வளவு முதலீடு செய்யப்படும், முழு திட்ட கால அட்டவணை என்ன என்பன குறித்து அரசு வெளிப்படையாக விளக்கம் அளிக்க வேண்டியது அவசியமாகிறது’’ என்றனர்.
