கடலூர்: குடிபோதையில் தனது மனைவியை தாக்கிய சகலையை கட்டையால் அடித்துக் கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கச்சிமயிலூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (40), கூலி தொழிலாளி. இவரது மனைவி மீனா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சரவணன் குடித்துவிட்டு அவரது மனைவி மீனாவிடம் அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அதேபோல கடந்த 1ம்தேதி தகராறில் ஈடுபட்டு மீனாவை சரவணன் தாக்கியுள்ளார். இதுபற்றி மீனா, அதே ஊரில் திருமணம் செய்து கொண்டு வசிக்கும் தனது தங்கை தேவிக்கு செல்போனில் கூறியுள்ளார்.
இதையடுத்து மீனா வீட்டிற்கு வந்த தேவி, சரவணனிடம் இதுபற்றி தட்டிக் கேட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த சரவணன் தேவியையும் தாக்கியுள்ளார். இதுபற்றி தகவல் கிடைத்து அங்குவந்த தேவியின் கணவர் கிருஷ்ணசாமி (33), தனது மனைவியை தாக்கியது குறித்து தட்டிக் கேட்கவே இருவருக்கும் வாய்த்தகராறு முற்றியது. அப்போது ஒருவருக்கொருவர் கட்டையால் தாக்கி கொண்டதில் 2 பேரும் படுகாயமடைந்தனர்.
இதில் தலையில் படுகாயமடைந்த சரவணனை மீட்ட உறவினர்கள் அருகிலுள்ள வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் கிருஷ்ணசாமியை கைது செய்தனர். அப்போது தனது மனைவியை போதையில் தாக்கிய ஆத்திரத்தில் சகலையை கட்டையால் அடித்துக் கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதன்பின்னர் கிருஷ்ணசாமியை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
