இந்தோனேசியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய 3 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். 3 நாடுகள் பயணத்தின் முதல் கட்டமாக, இந்தோனேசியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். அந்நாட்டின் அதிபர் மாளிகைக்கு இன்று காலை சென்ற மோடிக்கு, குதிரைப்படை வீரர்களின் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனிடையே, இந்தோனேசியாவின் உயரிய விருதான ‘பிந்தாங் அதிபூர்ணா’ பிரதமர் மோடிக்கு வழங்கி அந்நாட்டின் அதிபர் பிரபோவோ சுபியாண்டோ கௌரவித்துள்ளார். இந்தோனேசியாவின் ஒற்றுமை, நிலைத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றிற்குச் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இது பிரதமர் நரேந்திர மோடிக்கு பிற நாடுகளால் வழங்கப்படும் 35வது சர்வதேச விருதாகும். இந்த நிகழ்வில் பேசிய மோடி, இன்று இந்தியா இந்தோனேசியா இடையிலான உறவில் பொற்காலம் தொடங்குகிறது.
இந்தப் பொற்காலமானது 21-ஆம் நூற்றாண்டில் உலகத்திலுள்ள ஒட்டுமொத்த மனிதகுலத்தின் மீதும் ஆழமான, நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். நமது நாடுகளுக்கு இடையே வளர்ந்து வரும் நம்பிக்கை, பாதுகாப்பு மற்றும் கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகிறது. பாதுகாப்புத் துறை பரிமாற்றங்கள், பேரிடர் மேலாண்மை மற்றும் தொழில்சார் ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்த இன்று நாங்கள் உறுதிகொள்கிறோம். இந்தியப் பெருங்கடலில் கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய இனி நமது கடலோரக் காவல் படைகள் இணைந்து செயல்படும் என தெரிவித்தார்.
