இனவெறியை கக்கும் அதிபர் டிரம்ப் ஒபாமா தம்பதிக்கு எதிராக மீண்டும் போலி புகைப்படம்

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி குறித்து இனவெறி குறியீடுகளை கொண்ட போலி புகைப்படத்தை அதிபர் டிரம்ப் சமூக ஊடகத்தில் பகிர்ந்திருப்பது மீண்டும் சர்ச்சையாகி உள்ளது. கறுப்பினத்தவரான முன்னாள் அதிபர் பராக் ஒபாமா குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். சமீபத்தில் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிஷெல் ஒபாமாவை மனித குரங்குகளாக சித்தரித்து போலி புகைப்படத்தை டிரம்ப் சமூக ஊடகத்தில் பகிர்ந்தது கடும் சர்ச்சையானது.

அதன்பின் அந்த புகைப்படத்தை நீக்கினார். இந்நிலையில், தற்போது மீண்டும் ஒபாமா தம்பதி குறித்த போலி புகைப்படத்தை டிரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக பதிவில் பகிர்ந்துள்ளார். அதில், ஏர் போர்ஸ் ஒன் விமானத்தின் மேல் படிக்கட்டில் ஒபாமா தம்பதியினர் நின்றபடி சிரித்த முகத்துடன் கை அசைப்பது போல் உள்ளனர். அவர்கள் அருகில் விமானத்தில் ஸ்பிரே பெயிண்ட் மூலம் சில வாக்கியங்கள் எழுதப்பட்டுள்ளன.

அதில், ‘‘ஆம் நம்மால் முடியும்’’, ‘‘ஒபாமா’’, ‘‘பிஎல்எம்’’ என்பதுடன் அரபு மொழியில் ‘அல்ஹம்துலில்லாஹ்’ (கடவுளுக்கு நன்றி) என்பதும் இடம் பெற்றுள்ளது. சமீபத்தில் கத்தார் நாடு வழங்கிய புதிய ஏர் போர்ஸ் ஒன் விமானத்தை டிரம்ப் பயன்படுத்த தொடங்கிய நிலையில், இந்த புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

Related Stories: