நடுக்குப்பம் – கோட்டைகுப்பம் சுடுகாடு விவகாரம் இரு தரப்பு மோதல்; ஒருதலைபட்சமாக செயல்படும் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு: நீதி மறுக்கப்படுவதாக மீனவர்கள் குற்றச்சாட்டு

சென்னை: சுடுகாடு நில விவகாரத்தில் இரு தரப்பினரிடையே மோதலில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவதாக நடுக்குப்பம் ​மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் பெரிய கோட்டைக்குப்பம் ஆதிதிராவிடர் பகுதியை சேர்ந்தவர்களுக்கும், நடுக்குப்பம் மீனவர்களுக்கும் இடையே சுடுகாடு பிரச்னை கடந்த 30 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 6ம் தேதி இறந்தவரின் உடல் சுடுகாடுக்கு அனுமதிக்கப்பட்ட இடத்தை தாண்டி, படகுகள் நிறுத்திவைக்கும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

படகு நிற்கும் இடத்தில் அடக்கம் செய்யப்படுவதாக நடுக்குப்பம் மீனவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் பெரிய கோட்டைக்குப்பம் ஆதிதிராவிடர் மற்றும் நடுக்குப்பம் மீனவர்கள் இடையே பிரச்னை வெடித்துள்ளது. இது பெரும் கலவரமாக மாறியதையடுத்து மீனவர்கள் மீது காவல்துறையினர் 16 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் நடுக்குப்பம் மீனவர் கிராமத்தில் கடலையே நம்பி இருக்கும் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

மாற்று சுடுகாடு இருந்தும் பரம்பரை, பரம்பரையாக கடற்கரையில்தான் அடக்கம் செய்வோம் என ஆதிதிராவிடர் தரப்பும், கடலையே நம்பியிருக்கும் எங்களின் வாழ்வாதரம் பாதிக்கப்படுவதாக நடுக்குப்பம் மீனவர்களும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இந்நிலையில் இந்த பிரச்னை தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரை சந்திக்க நடுக்குப்பம் மீனவ கிராம பெண்கள் நேற்று திரண்டு வந்தனர். அங்கு உள்துறை செயலாளரை சந்தித்து மனு அளித்தனர். பின்னர் மீனவ கிராம பெண்கள் கூறியதாவது:

கோட்டைக்குப்பம் பகுதியில் உள்ள சுடுகாடு நிலம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கடல் நீர் மட்டத்திலிருந்து வெறும் 20 மீட்டர் தொலைவிலேயே அந்தச் சுடுகாடு அமைந்துள்ளது. சட்டப்படி மீனவர்களின் வாழ்வாதாரப் பகுதியான கடலோரத்திலிருந்து 300 மீட்டர் தூரத்திற்குள் இத்தகைய ஆக்கிரமிப்புகள் இருக்கக் கூடாது. எங்களது படகுகளை நிறுத்தக்கூடிய வாழ்வாதார உரிமைப் பகுதி இது. சுடுகாட்டை மாற்றுங்கள், இல்லையெனில் எங்கள் ஊரையே மாற்றிவிடுங்கள் என்று நாங்கள் கோரிக்கை வைத்தபோது, ஆட்சியர் எங்களை ஒருமையில் பேசி வெளியேற்றினார்.

இந்த நிலையில் திட்டமிட்டபடி அடுத்தடுத்த நாட்களில் இரு உடல்கள் வழக்கமான இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், மூன்றாவது நாளாக மற்றொரு உடலை வழக்கமான இடத்திற்குப் பதிலாக, மீனவர்கள் படகு நிறுத்தும் கடற்கரை பகுதிக்கு ஊர்வலமாக எடுத்து வந்து புதைக்க எதிர் தரப்பினர் முயன்றுள்ளனர். ​இதனை மீனவர்கள் தடுத்து நிறுத்தியபோது மோதல் ஏற்பட்டது. ​ 150 முதல் 200 பேர் கொண்ட கும்பல் மீனவர்கள் மீது சரமாரியாகக் கல்லெறிந்து தாக்குதல் நடத்தினர்.

ஆனால் மீனவர்கள் திட்டமிட்டு தாக்குதலை நடத்தியதாக பொய் புகார் பெறப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பெண்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பொய் வழக்குகள் போடப்பட்டு கைது செய்துள்ளனர். இதனிடையே ​அமைச்சர் வன்னி அரசு வந்து பார்வையிட்ட பிறகுதான், இந்த விவகாரம் திட்டமிட்டு பொய் வழக்காக மாற்றப்பட்டுள்ளது. அமைச்சர் வந்தபோது 400க்கும் மேற்பட்ட எதிர் தரப்பினர் அவரைச் சூழ்ந்ததால், அவர் இடத்தை முழுமையாகப் பார்வையிடவில்லை.

மீனவர்கள் தரப்பு நியாயத்தைக் கேட்காமலே இங்கு பெஞ்ச் மற்றும் பாதுகாப்புச் சுவர் அமைத்துத் தாருங்கள் என்று எதிர் தரப்பிற்கு ஆதரவாக உத்தரவிட்டார். மேலும் ‘நான் எங்கள் சமூகத்திற்குதான் முக்கியத்துவம் தருவேன், அதன்பிறகு தான் மற்றவர்கள்’ என ஒருதலைப்பட்சமாக அமைச்சர் கூறுகிறார். அமைச்சராக இருந்து கொண்டு சாதி கலவரத்தை தூண்டும் வகையில் பேசுகிறார். மீனவர்கள் கொடுத்த புகாரின் மீது காவல்துறை இதுவரை எந்த எப்.ஐ.ஆர்ம் பதிவு செய்யவில்லை.

ஆனால், எதிர் தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் மீனவர்கள் 37 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 16 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர, காவல்துறையினரை தாக்கியதாக மேலும் 30 பேர் மீது தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மொத்தம் 67 பேர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர். ​எங்களுக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும். காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடுநிலையோடு செயல்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: