* அரசுக்கு கோடிக்கணக்கான வருவாய் இழப்பு
* நிலத்தடி நீர் பாதிப்பு; விவசாயிகள் வேதனை
* மழைக்காலத்தில் கரைகள் உடையும் அபாயம்
செங்கம், ஜூன் 26: செங்கம் ஏரிகளில் அனுமதியின்றி லாரிகளின் ஆழத்துக்கு மண் அள்ளி கடத்தப்படுவதால் நிலத்தடி நீர் பாதித்து விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க செல்லும் அதிகாரிகள் கொலை மிரட்டல் சம்பவத்தால் அலறுகின்றனர். இதனால் மழைக்காலத்தில் கரைகள் வலுவிழந்து உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே போலீஸ் பாதுகாப்புடன் மண் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்தில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 60 ஏரிகள் உட்பட வருவாய்த்துறை மற்றும் கிராம ஊராட்சிகளுக்கு சொந்தமாக ஏரிகள் என 100க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக செங்கம் அடுத்த காஞ்சி, மேல்பள்ளிப்பட்டு உள்ளிட்ட பெரும்பாலான ஏரிகளில் இருந்து பல அடி ஆழத்துக்கு மண் அள்ளப்பட்டு கடத்தப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்படுவதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் செங்கம் அடுத்த காயம்பட்டு கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் முரம்பு மண் கடத்துவதாக செங்கம் நீர்வளம் பொதுப்பணித்துறை உதவி பொறியாளராக பணிபுரிந்து வரும் ஹரிஹரனுக்கு கடந்த 20ம் தேதி ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அன்று மாலை உதவி ெபாறியாளர் மற்றும் பணி மேற்பார்வையாளர் பெருமாள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது டிப்பர் லாரிகள் உயரத்துக்கு மண் அள்ளப்பட்டிருந்தது. மேலும் 2 ஜேசிபி இயந்திரங்கள் மூலம் 3 டிப்பர் லாரிகளில் முரம்பு மண்ணை அள்ளி கடத்திக்கொண்டிருந்தவர்களை அதிகாரிகள் தடுத்து எச்சரித்தனர். அதற்கு கடத்தல்காரர்கள் அதிகாரிகள் இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்றுள்ளனர். இதையடுத்து வாகனங்களின் பதிவெண்ணை வைத்து உதவி பொறியாளர் ஹரிகரன் செங்கம் போலீசில் புகார் அளித்தார். ஆனால் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்த கொலை மிரட்டல் சம்பவத்தால் அதிகாரிகள் மணல் கடத்தல்காரர்களை நினைத்து அலறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல் செங்கம் வட்டம், மேல்முடியனூர் கிராமத்தில் பொதுப்பணித்துறை நீர்வள துறையின் பராமரிப்பில் உள்ள சித்தேரியில், தொடர்ந்து சமூக விரோத கும்பல் வணிக நோக்கத்திற்காக கனிம வளக்கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். முறையாக அனுமதி பெறாமலும் மோசடியான முறையில் முறைகேடாக பதிவு செய்யப்பட்டு வணிக நோக்கத்திற்காக பயன்பாட்டிற்கு எடுத்துச்செல்லப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இங்கும் லாரிகள் உயரத்துக்கு மண் அள்ளப்பட்டு கடத்தப்பட்டு வருகிறது. இந்த கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் லாரிகளுக்கான பதிவெண்கள் உண்மையானதா? முறையாக பர்மிட் பெறப்பட்டுள்ளதா? என்பதே சந்தேகம்தான் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கூறியதாவது: ஏரி மண் மற்றும் வண்டல் மண் கடத்தலால் நிலத்தடி நீர்மட்டம் குறைதல், ஏரியின் பாதுகாப்பு அச்சுறுத்தல், விவசாயம் பாதிப்பு, சூழலியல் சீர்கேடு மற்றும் அரசுக்கு வருவாய் இழப்பு போன்ற கடுமையான விளைவுகள் ஏற்படுகின்றன. இயந்திரங்கள் மூலம் கண்மூடித்தனமாக மணல் அள்ளப்படுவதால் மழைநீர் பூமிக்குள் உறிஞ்சப்படுவது தடுக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரியும் அபாயம் உருவாகி உள்ளது.
மேலும் ஏரியின் கரைகள் உறுதித்தன்மையை இழப்பதால் வெள்ள காலங்களில் கரைகள் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகும் ஆபத்து ஏற்படும். மேல்முடியனூர் கிராமத்தில் உள்ள ஏரியை சுற்றிலும் முத்தனூர், முடியனூர், அம்மாபாளையம், பெரிய ஏரி, உண்ணாமலை பாளையம் உட்பட பல்வேறு கிராமங்களுக்கு வெள்ள அபாயம் ஏற்படும் என பீதியில் உள்ளனர்.
மேலும் ஏரி நீரை நம்பி இருக்கும் விவசாய நிலங்கள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படுகிறது. சட்டவிரோதமாக அரசு அனுமதியின்றி மணல் அள்ளப்பட்டு செங்கல் சூளைகள் மற்றும் கட்டுமான தொழிலுக்கு விற்கப்படுவதால் அரசுக்கு கிடைக்க வேண்டிய கோடிக்கணக்கான கனிம வள வருவாய் இழக்கப்படுகிறது. இதற்கிடையில் அதிகாரிகளுக்கே கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. எனவே போலீஸ் பாதுகாப்புடன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏரி மண் கடத்துவதால் ஏற்படும் பேராபத்துகள்
ஏரிகளில் அளவுக்கு அதிகமாக மண் அள்ளப்படுவதால் நீர் பூமிக்குள் உறிஞ்சப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டு, கிணறுகள் மற்றும் போர்வெல்களில் நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு செல்கிறது. இயந்திரங்கள் மூலம் கரைகளின் அருகே தோண்டப்படுவதால் ஏரியின் பலம் குறைந்து, மழைக்காலங்களில் உடைப்பு ஏற்பட்டு கிராமங்களுக்குள் வெள்ளம் புகும் அபாயம் ஏற்படுகிறது. நீர்வரத்து கால்வாய்கள் சேதமடைவதால் பாசன வசதி பாதிக்கப்படுகிறது. மேலும் ஏரியை நம்பியிருக்கும் பறவைகள், மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களின் வாழ்வாதாரம் அழிகிறது. கனிமவள கொள்ளையர்களால் ஏரியின் நடுவே தோண்டப்படும் ஆபத்தான ஆழமான குழிகளில் தேங்கும் நீரில் சிக்கி சிறுவர்கள் மற்றும் கால்நடைகள் உயிரிழக்கின்றனர். அதிக எடையுடன் மண் ஏற்றி செல்லும் லாரிகளால் கிராமப்புற சாலைகள் உடைந்து விபத்துகள் நேரிடுகின்றன.
