கோயம்புத்தூர்: போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க இன்று அதிகாலை 4 மணியளவில் கோயம்புத்தூர் முழுவதும் போலீசார் அதிரடி ரெய்டு நடத்தியதில் ஏராளமான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கல்லூரி மாணவர்கள், வடமாநில தொழிலாளர்கள் தாங்கும் விடுதிகள், PG ஹாஸ்டல்கள், லாட்ஜ்களில் போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினார்கள். ரெய்டு குறித்தும், அதில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்தும் இன்று மாலை போலீசார் விரிவான அறிக்கையை அளிக்கவுள்ளனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் தலைமையிலான 400க்கும் மேற்பட்ட போலீசார் கோவை முழுவதும் சோதனை மேற்கொண்டனர். தடை செய்யப்பட்ட குட்கா போன்ற பொருட்களை போலீசார் பறிமுதல் செய்திருப்பதாகவும் இது தொடர்பாக அடுத்தகட்ட விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரி தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக தொண்டாமுத்தூர், மாதம்பட்டி, கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை 4 மணி முதல் ரெய்டு நடத்தி வருகின்றனர்
பேருந்து மற்றும் ரயில் மூலம் போதைப்பொருட்கள் உள்ளே வருவதும், அதை குறிப்பிட்ட இடத்தில் வைத்து பிரித்து சப்ளை செய்வதும் தெரிய வந்ததையடுத்து ரெய்டு நடத்தப்பட்டது . ரெய்டில் கிலோ கணக்கில் கஞ்சா மற்றும் மெத்தப்பெட்டமைன், குட்கா போன்ற தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் தொடர்பாக அடுத்தக்கட்ட விசாரணை நடத்திவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் எவ்வளவு? கைது செய்யப்பட்டவர்கள் எத்தனைப்பேர்? போன்ற விவரங்களை விரிவான அறிக்கையில் மாலை 4 மணிக்கு காவல்துறையினர் தெரிவிக்க இருக்கின்றனர்.
