துரைப்பாக்கம், ஜூன் 29: சென்னை, நீலாங்கரை பகுதியில் 33 வயது பெண் ஒருவர் கணவர் இழந்த நிலையில் தனது மகன் மற்றும் மகளுடன் வசித்துக் கொண்டு நீலாங்கரை பாண்டியன் சாலையில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் அடிக்கடி பெண்ணின் கடைக்கு சென்று ஆபாசமாக பேசியும், ஆபாச செயல்களில் ஈடுபட்டு, செல்போனிலும் பேசி தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் பெண் சதீஷ் செல்போன் எண்ணை பிளாக் செய்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 23ம் தேதி இரவு பெண் மீன் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த சதீஷ் அப்பெண்ணிடம் தகாத முறையில் பேசி செல்போன் எண்ணை ஏன் பிளாக் செய்தாய் எனக்கூறி மீன்கடையில் இருந்த பாத்திரத்தை காலால் எட்டி உதைத்து கொலை மிரட்டல் விடுத்து சென்றார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் நீலாங்கரை காவல் நிலையத்தில் கொடுத்தார். புகார் மீது போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பெண்ணுக்கு தொல்லை கொடுத்தவர் பெரிய நீலாங்கரை குப்பத்தை சேர்ந்த சதீஷ்(32) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நேற்று அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
