சென்னை: சென்னையை சேர்ந்த எம்.தமிழழகன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொது நல மனுவில், சென்னை புழல் மத்திய சிறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் உள்ளனர். இவர்களுக்கு சட்ட ரீதியாக உதவி வழங்குவதற்கான வசதிகள் மிகவும் குறைவாக உள்ளது என்று தெரிவித்திருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.நதியா, புழல் சிறையில் கைதிகளை வழக்கறிஞர்கள் மற்றும் உறவினர்கள் சந்திப்பதற்காக 16 கேபின்கள் அமைக்கப்பட்டு, தினமும் 3 முறை தலா அரை மணிநேரம் ஒதுக்கப்பட்டு வாய்ப்பு தரப்படுகிறது. அரை மணிநேரத்தில் 5 கைதிகளை சந்திக்க வேண்டிய நிலை உள்ளதால் கைதிகளுக்கு சட்டரீதியான ஆலோசனைகளை வழங்க முடியவில்லை என கூறினார்.
புழல் சிறை நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.தினேஷ், மனுதாரரின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கைதிகளை சந்திப்பதற்கான வாய்ப்புகளின் எண்ணிக்கையை ஆறிலிருந்து எட்டாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அது அமல்படுத்தப்படும் என்று உறுதியளித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிறை நிர்வாகத்தின் உத்தரவாதத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
