* மீண்டும் வேலையை காட்டுகிறதா ஒன்றிய பாஜ அரசு; தமிழக அரசு மவுனமாக இருப்பது ஏன்? மக்கள் கேள்வி
மதுரை: முன்னாள் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தொடர்ந்து, மதுரையில் கலெக்டர் மற்றும் போலீஸ் கமிஷனருடன் ஆளுநர் ஆய்வு கூட்டம் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நேற்று விமானம் மூலம் மதுரை வந்தார். அங்கு அவரை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஆளுநர், மதியம் அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்தார்.
அப்போது கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்டார். அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்தும் விதம், சட்டம், ஒழுங்கு தொடர்பான விவகாரங்கள், வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பகல் 12.30 மணிக்கு துவங்கிய ஆய்வுக்கூட்டம், 1.30 மணி வரை நடந்தது. அப்போது, நிர்வாக நடைமுறைகள், மக்கள் குறைதீர்ப்பு பணிகள், மின்னணு பயன்பாடு, நீர் நிலைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள், பொது சுகாதாரம் மற்றும் நோய் தொற்று தடுப்பு பணிகள், கல்வித்துறை உள்ளிட்டவற்றில் ஒன்றிய அரசின் திட்டங்களை முறையாக செயல்படுத்துதல் குறித்த ஆளுநரின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு கலெக்டர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பில் தீவிர நடவடிக்கை, சட்டம், ஒழுங்கை முறையாக பாதுகாத்தல் போன்றவற்றில் காவல் துறையினரின் தொடர் நடவடிக்கைகள் குறித்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் விளக்கம் கேட்டு பெற்றுள்ளார். ஆய்வு கூட்டம் முடிந்த பிறகு அதிகாரிகள் கிளம்பி சென்றனர். கடந்த திமுக ஆட்சியின்போது ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி, ஆய்வு கூட்டங்கள் நடத்த கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அவர் அதை கைவிட்டார்.
இதன்பிறகு தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக பொறுப்பேற்ற அர்லேகர், சென்னையில் ஆளுநர் மாளிகை தொடர்பான பணிகளில் மட்டும் ஈடுபட்டு வந்தார். தற்போது மதுரையில் முதன்முறையாக அதிகாரிகளுடன் ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளார். மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் முக்கிய அதிகாரிகளான கலெக்டர் மற்றும் போலீஸ் கமிஷனருடன் அரசுப் பணிகள் குறித்து ஆளுநர் ஆய்வு செய்துள்ளார். இதன்மூலம் மீண்டும் ஆளுநர் மூலம் தமிழக அரசை மறைமுகமாக நடத்த பாஜ முயற்சிக்கிறதா? தமிழக அரசு இதுகுறித்து கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என அரசியல் தலைவர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
* தமிழ்த்தாய் வாழ்த்தை 3வதாக பாடியதால் சர்ச்சை
நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டது. அதைத் தொடர்ந்து தேசிய கீதமும். இறுதியாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. விழாவில் முதலில் தமிழில், ‘சகோதரி, சகோதரர்மார்களுக்கு வணக்கம்’ என ஆளுநர் பேசினார். பின்னர் ‘அடுத்தமுறை இங்கு வரும்போது தமிழில் பேசுவேன். ஏனென்றால் தமிழ் இப்போது எனது மொழியாகிவிட்டது. எனது மொழியை நான் தவிர்க்க முடியாது. இந்தி பேசினால் உங்களுக்கு புரியாது. எனவே வெளிநாட்டு மொழியான ஆங்கிலத்தில் பேசுகிறேன்’ என்றார்.
* ‘வைகை ஆற்றினை சீரமைப்பதற்கு ஆளுநர் மாளிகையே களமிறங்கும்’
மதுரை, திருப்பரங்குன்றம் பகுதியில் சவுராஷ்டிரா கல்லூரி மற்றும் சென்னை தென்னிந்திய ஆய்வு மையம் இணைந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய ஐஎன்ஏ எனப்படும் இந்திய தேசிய ராணுவத்தின், ‘ஐஎன்ஏ வேர்களைத்தேடி’ என்ற தலைப்பிலான கட்டுரை மற்றும் குறும்படப் போட்டி பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் ஆளுநர் அர்லேகர் பேசுகையில், மதுரையில் வைகை ஆறு பார்த்து ஆச்சரியப்பட்டேன்.
ஏனெனில் இங்கு ஆறு உள்ளது, ஆனால் தண்ணீர் இல்லை. ஒரு ஆற்றில் நீர் இருக்க வேண்டும். குஜராத்தில் நிரஞ்சனா என்ற ஆற்றின் நிலையும் இதுபோலவே இருந்தது. அது சதீஷ் என்பவர் முயற்சியால் தூய்மையானது. அதேபோல், மதுரையை சேர்ந்த இளைஞர்கள் இந்த ஆற்றை தூய்ைமப்படுத்த முயற்சிக்க வேண்டும். யாரும் செய்யாவிட்டால் அந்த முயற்சியை ஆளுநர் மாளிகை மேற்கொள்ளும். துப்பாக்கியுடன் போருக்கு செல்வது மட்டுமின்றி, இதுவும் தேசப்பற்று என்பதை உணர வேண்டும். வைகை ஆறு மட்டுமின்றி இளைஞர்கள் சக்தியால், நாட்டில் பல மாற்றங்களை கொண்டுவர முடியும் என்றார்.
* மாநில உரிமைகளை தாரைவார்ப்பதா? உதயநிதி கண்டனம்
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ்தள பதிவு: மதுரை சென்றிருந்த ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், தான் நியமன பதவியில் – அதுவும் கூடுதல் பொறுப்பில் தமிழ்நாடு ஆளுநராக இருப்பதை மறந்து, மக்கள் பிரதிநிதி போல ஆய்வு நடத்தி இருக்கிறார். அரசியலமைப்புக்கும் – மாநில உரிமைக்கும் எதிரான இந்த செயலில் ஈடுபட்ட ஆளுநருக்கும், இதை அனுமதித்த சோபா மாடல் அரசிற்கும் கடும் கண்டனங்கள்.
ஆளுநர் மாளிகையின் பராமரிப்பே தமிழ்நாடு அரசிடம் இருக்கும் போது, வைகையை அரசு சீரமைக்காவிட்டால் ஆளுநர் மாளிகை களம் இறங்கும் என்று அடாவடியாக பேசி இருக்கிறார். ஆளுநரின் இந்த அசட்டுத் துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம். ஆளுநர் பங்கேற்ற அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவம் குறைக்கப்படும் அளவுக்கு, என்ன காம்ப்ரமைஸ் செய்யப்பட்டது என்று சட்டமன்றத்தில் கேட்டிருந்தோம். அதற்கு உரிய பதிலைச் சொல்லாத ஆளுங்கட்சியினர், இன்றைக்கு ஆளுநரை ஆய்வு செய்யவிட்டு, மாநில உரிமைகளை காம்ப்ரமைஸ் செய்திருப்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.
சட்டத்துக்குப் புறம்பாக அடுத்தக் கட்சி எம்.எல்.ஏ.க்களை ‘பேனிக் பையிங்’ செய்யும் ஆளும்கட்சி, ஆளுநர் நடவடிக்கை எடுத்துவிடுவாரோ என்ற ‘ஆங்சைட்டியில்’ அவரது ஆய்வை அனுமதிக்கிறதா? முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய ஆளுநர் ஆய்வுகளில் ஈடுபட்ட போது, அவர் சென்ற இடங்களில் எல்லாம் கழகத்தினர் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தோம். கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை நாங்கள் அனுமதித்ததில்லை. ஆகவே, மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளை தாரைவார்க்காமல், ஆளுநர் ஆய்வு செய்யும் நடைமுறையை உடனே நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
