நெல்லை: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நெல்லை மாவட்டம், மகேந்திரகிரி வளாகத்தில் கடந்த 24ம் தேதி செமி கிரையோஜெனிக் என்ஜினின் 8வது பவர் ஹெட் சோதனையை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக நடத்தினர். இதில் அதிகபட்சமாக 175 டன் உந்து சக்தியில் என்ஜினை இயக்கி சரிபார்த்தனர். இந்த சோதனையின் மூலம் என்ஜினின் பிரதான டர்போ பம்புகள் 400 மற்றும் 500 பார் அழுத்தத்தில் எந்தவித இடையூறும் இன்றி சீராக செயல்படுவதை இஸ்ரோ உறுதி செய்தது.
முன்னதாக 94 டன் மற்றும் 120 டன் உந்து சக்திகளில் சோதனைகளை நடத்திய நிலையில், தற்போது 88 சதவீத திறனில் என்ஜினை வெற்றிகரமாக இயக்கிப் பார்த்துள்ளனர். கூடிய விரைவில் முழுமையான 200 டன் உந்து சக்தியில் என்ஜினை இயக்கி அடுத்தகட்ட சோதனைகளை இஸ்ரோ மேற்கொள்ளும். எல்.வி.எம்-3 ராக்கெட்டின் மையப் பகுதியில் உள்ள எல்-110 உந்து விசை தளத்திற்கு மாற்றாக இந்த புதிய அதிநவீன என்ஜினை இஸ்ரோ பயன்படுத்தும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
