சேலம்: பிளஸ் 2 பொதுத்தேர்வில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சேலம் மாவட்ட சிஇஓ இடமாற்றம் செய்யப்பட்டு, துறை ரீதியிலான நடவடிக்கைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறையில் முதன்மை கல்வி அலுவலர் நிலையிலான 6 அலுவலர்கள், பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 4 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, சிஇஓக்களாக பதவி உயர்வு வழங்கி பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
இதில், சேலம் மாவட்ட சிஇஓவாக இருந்த மகேஸ்வரி, தொடக்கக்கல்வி இயக்கக துணை இயக்குநராக (நிர்வாகம்) மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, மாநில பெற்றோர் ஆசிரியர் கழக செயலராக இருந்த எல்லப்பன், சேலம் மாவட்ட சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது மாற்றப்பட்டுள்ள சேலம் மாவட்ட சிஇஓ மகேஸ்வரி, கடந்த நவம்பர் மாதம் தான் அப்பொறுப்பினை ஏற்றார்.
தற்போது இடமாறுதல் செய்யப்பட்டுள்ள 6 பேரில், 5 பேருக்கு சிஇஓ பொறுப்பே பிற மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சிஇஓ மகேஸ்வரிக்கு மட்டும் டம்மியாக கருதப்படும், துணை இணை இயக்குநர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வின் போது நடந்த முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக சிஇஓ மகேஸ்வரி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
* கண்ணாடி டம்ளரை உடைத்தெறிந்த சிஇஓ
சிஇஓ மகேஸ்வரியை இடமாற்றம் செய்வதற்கான ஆணை, நேற்று மாலை வெளியானது. இதனையடுத்து, சிஇஓ அலுவலகத்திற்கு வந்த அவர், அவசர அவசரமாக ஏற்கனவே பெற்ற `கவனிப்புக்காக’ அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பணி நியமனம், சஸ்பெண்ட் ரத்து, பிற அனுமதி சார்ந்த 6 கோப்புகளில் கையெழுத்திட முயன்றார். இதற்கான கோப்புகளை கேட்ட போது, அங்கிருந்த கண்காணிப்பாளர் வழங்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தனது பெண் நேர்முக உதவியாளரை (மேல்நிலைக்கல்வி) அழைத்து கோப்புகளை எடுத்து வருமாறு கூறினார். ஆனால், தங்களுக்கு ஏதேனும் சிக்கல் வருமோ என்று நினைத்த அதிகாரிகள், கோப்புகளை மறைத்து வைத்தனர். இதனால், விரக்தியடைந்த சிஇஓ மகேஸ்வரி, தனது டேபிளில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி டம்ளரை எடுத்து உடைத்தெறிந்து விட்டு, ஆவேசத்துடன் அங்கிருந்து கிளம்பியுள்ளார்.
