சென்னை: முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். திருச்செந்தூர் அருகே ஆத்தூர் பகுதியில் ஜூன் 20ம் தேதி முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய, திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக தவெக நகரச் செயலாளர் செல்வம் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஆத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி, அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ஆளுங்கட்சியின் நடவடிக்கைகள் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பு குறித்து பிரதான எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. என்ற முறையில் பேசியதாகவும், அரசியல் உள்நோக்கத்துடன் தனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
