மும்பை: தங்களை முதுகுக்கு பின்னால் இருந்து அநாகரீகமாக புகைப்படம் எடுக்கும் புகைப்படக்கலைஞர்களை பாலிவுட் நடிகை நேகா தூபியா கடுமையாக எச்சரித்தார். பாலிவுட் நடிகர் அங்கத் பேடியின் மனைவியான நடிகை நேகா தூபியா, மும்பையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் புகைப்படக்கலைஞர்களை நேருக்கு நேராக சந்தித்து கடுமையாக சாடினார். அப்போது அவர் பேசுகையில், ‘மரியாதைக்குறைவாக முதுகுக்கு பின்னால் இருந்து ஏன் ஆபாசமான புகைப்படங்களை எடுக்கிறீர்கள், யார் இதை செய்வது, இதை உடனே நிறுத்துங்கள். எனக்கோ அல்லது வேறு யாருக்கோ இதுபோன்று செய்ய வேண்டாம். இதைத் திரும்பத் திரும்பச் சொல்லி நாங்கள் சோர்வடைந்துவிட்டோம். இந்த அத்துமீறல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள்.
உங்களிடம் நாங்கள் மிகுந்த மரியாதையுடன் பேசுகிறோம். எனவே, இதுபோன்ற அநாகரீகமான செயல்களில் ஈடுபடாதீர்கள்’ என்று ஆவேசமாக தெரிவித்தார். ஏற்கனவே பாலிவுட் நடிகை நேகா தூபியா ஓடுதளத்தில் ஓடும் காணொளிகள் இணையத்தில் வேகமாக பரவியது. இதேபோல், கடந்த மே மாதம் மருத்துவமனைக்கு சென்ற நடிகர் சல்மான் கானை அத்துமீறி புகைப்படம் எடுத்த போது அவர் அதிருப்தி அடைந்ததால் ஊடகத்தினர் அவரிடம் மன்னிப்பு கேட்டனர். மேலும், நடிகை சோனாக்ஷி சின்ஹா தனது கணவர் ஜாகிர் இக்பால் மற்றும் தந்தை சத்ருகன் சின்ஹா ஆகியோருடன் மும்பையில் உள்ள உணவகத்தில் இருந்து வெளியே வந்தபோது, கைகூப்பி புகைப்படம் எடுப்பதை தவிர்க்கும்படி கேட்டும் புகைப்படக்கருவிகள் தொடர்ந்து இயங்கியதால் அவர் மிகவும் அதிருப்தி அடைந்தார். திரைத்துறையினரின் தனிப்பட்ட எல்லைகளை மீறும் இந்த தொடர் சம்பவங்களால் அதிருப்தி நிலவி வருகிறது.
