அன்னக்கிளி உள்ளிட்ட 134 பட பாடலுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி: இசைஞானி இளையராஜா அன்னக்கிளி, 16 வயதினிலே உள்ளிட்ட 134 படங்களின் பாடல்களை உரிமை கோர முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அன்னக்கிளி, 16 வயதினிலே, முள்ளும் மலரும், ராஜ பார்வை, நெற்றிக்கண் உள்ளிட்ட 134 படங்களின் பாடல்களைப் பயன்படுத்தவோ உரிமம் பெறவோ இளையராஜாவுக்கு உரிமை இல்லை என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பதிப்புரிமை சர்ச்சையில், சரிகம நிறுவனத்துக்கு சாதகமான இடைக்கால தடையை நீக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

சரிகம இந்தியா லிமிடெட்’ (Saregama India Limited) நிறுவனம் இளையராஜாவுக்கு எதிராகத் தொடர்ந்த காப்புரிமை வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 1976 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் வெளியான 134 திரைப்படங்களின் பாடல்களுக்கான காப்புரிமை, அந்தந்தப் படத் தயாரிப்பாளர்களுடனான ஒப்பந்தங்கள் மூலம் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சரிகம நிறுவனம் வாதிட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி துஷார் ராவ் கெடேலா, ஏற்கனவே இளையராஜாவுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை உறுதி செய்தார். இளையராஜா இந்தப் பாடல்களை அமேசான் மியூசிக் (Amazon Music), ஐடியூன்ஸ் (iTunes) மற்றும் ஜியோ சாவன் (JioSaavn) போன்ற தளங்களில் பதிவேற்றியதையும், அந்தப் பாடல்கள் மீது உரிமை கோரியதையும் எதிர்த்து சரிகம நிறுவனம் நீதிமன்றத்தை அணுகியிருந்தது.

இந்தியக் காப்புரிமைச் சட்டம் 1957-ன் படி, ஒரு தயாரிப்பாளர் இசையமைப்பாளருக்கு ஊதியம் வழங்கி இசையை உருவாக்கச் சொல்லும்போது, அந்தப் படைப்பின் முதல் உரிமையாளர் தயாரிப்பாளரே ஆவார். தயாரிப்பாளர்கள் அந்த உரிமையை சரிகம நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதால், இளையராஜா அதன் மீது உரிமை கோர முடியாது என்று சரிகம தரப்பில் வாதிடப்பட்டது.

இந்தத் தடையை நீக்க இளையராஜா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதால், இந்த வழக்கு முடியும் வரை அந்த 134 படங்களின் பாடல்களை இளையராஜா வணிக ரீதியாகப் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

Related Stories: