போலீஸ் மீதும் சட்ட நடவடிக்கை தீவிரவாதிகளுக்கு பாஸ்போர்ட் புதுப்பிக்க உதவியது தேசத்துரோகம்: ஏஜென்ட் மீதான வழக்கை ரத்து செய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் மறுப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூருவில் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வருபவர் ஹைதர். இவர், ஆந்திர மாநிலத்தில் தேடப்படும் தீவிரவாதியான இப்ராகிம் கலீல் உட்பட மொத்தம் 15 பேருக்கு சட்டவிரோதமாக பாஸ்போர்ட் புதுப்பித்துக் கொடுத்துள்ளார். இந்த 15 விண்ணப்பங்களிலும், தனது சொந்த முகவரியையே உண்மையான முகவரியாகக் குறிப்பிட்டு அவர் போலியான ஆவணங்களைத் தயாரித்துள்ளார். இது தொடர்பாக மங்களூரு வடகிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

பின்னர் ஹைதருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். இந்நிலையில் இவ்வழக்கை ரத்து செய்யக் கோரி ஹைதர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அம்மனுவை விசாரித்த நீதிபதி எம்.நாகபிரசன்னா வழங்கிய தீர்ப்பில், சாதாரண குடிமக்களோ, இடைத்தரகர்களோ அல்லது அரசு ஊழியர்கள் என யாராக இருந்தாலும் நாட்டிற்கு துரோகம் செய்வது மன்னிக்க முடியாத செயலாகும்.

நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் தீவிரமான வழக்குகள் மீதான விசாரணையை, தனிப்பட்ட உடல்நலம் அல்லது கருணை ஆகியவற்றின் அடிப்படையில் நிறுத்த முடியாது. தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மட்டுமல்லாமல், தீவிரவாதிகள் பாஸ்போர்ட் பெற போலி ஆவணங்களை உருவாக்குபவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவுபவர்கள் அனைவரும் துரோகிகளே. இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் ஒரே முகவரியில் வசிக்கும் 15 பேரின் பாஸ்போர்ட் விண்ணப்பங்களை எவ்வித சரிபார்ப்பும் இன்றி அங்கீகரித்த போலீஸ் அதிகாரிகளின் செயல்பாடு, ஆச்சரியம் அளிக்கிறது. இது வெறும் நிர்வாக ரீதியான தவறு மட்டுமல்ல, நாட்டின் இறையாண்மைக்கே அச்சுறுத்தல் விளைவிக்கக்கூடிய வகையிலான தீவிரமான பணித் தவறு ஆகும். இதுபோன்ற குற்ற செயல் நடக்க உறுதுணையாக இருந்த போலீஸ் அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட முன்மொழிவை விரைவாக பரிசீலித்து முடிவெடுக்குமாறு மாநில அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: