சினிமாவில் வரும் கொடூரமான வில்லத்தனக் காட்சிகளை தமிழ்நாடு நிஜத்தில் அனுபவிக்க தொடங்கியுள்ளது: திமுக கடும் கண்டனம்

சென்னை: திமுக தலைமை கழக சமூக வலைத்தள பதிவு: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்ற 19 வயது இளைஞரும், 16 வயது பெண்ணும் காதலித்த விவகாரத்தில், வெவ்வேறு சாதிகளைச் சார்ந்த இரு வீட்டாருக்கும் பிரச்னை ஏற்பட்ட நிலையில், இளைஞரும் அந்தப் பெண்ணும் ஒரு குடிசையில் தூக்கில் தொங்கும் காட்சிகளைப் பார்த்து தமிழ்நாடே பதைபதைக்கிறது.

இந்த மர்ம மரணங்கள் குறித்து பல சந்தேகக் கேள்விகள் எழுந்திருப்பதுடன், சிங்கப்பெண் என்கிற ஸ்டிக்கர் திட்டத்தின் ஆட்சியில், பிளஸ் 2 படிக்கும் பெண்ணின் உயிருக்குக்கூட பாதுகாப்பு இல்லாத மோசமான சூழல் நிலவுவதை உணர முடிகிறது. இதுவரை வடமாநிலங்களில் மட்டுமே, வீடுகளை இடிக்கும் காட்சிகளைப் பார்த்து வந்த நாம், தமிழ்நாட்டில் உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில், இரு குடும்பத்தார் பிரச்னையில் வீடுகளும் வாகனங்களும் நொறுக்கப்படும் புதிய அபாயமும் அரங்கேறியுள்ளது.

சினிமாவில் மட்டுமே வரக்கூடிய கொடூரமான வில்லத்தனக் காட்சிகளை தமிழ்நாடு நிஜத்தில் அனுபவிக்க தொடங்கியுள்ளது. இத்தனை கொடூரங்களும் முதல்வர் ஆய்வு நடத்தும் நாளிலேயே அரங்கேறி இருப்பது சட்டம்-ஒழுங்கு மிக மோசமாக சீரழிந்திருப்பதையே காட்டுகிறது. குதிரை பேரத்தில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் சோபா மாடல் அரசின் முதல்வர், தன் கட்டுப்பாட்டில் உள்ள சட்டம் ஒழுங்கின் மீது இனியாவது கவனம் செலுத்துவாரா? திமுக இதைக்கூட விமர்சிக்காமல்-கேள்வி கேட்காமல் 6 மாதம் பொறுத்திருந்தால், அநியாயமாகப் பறிபோன இரண்டு உயிர்களைத் திருப்பிக் கொடுத்து விடுவாரா ரீல்ஸ் முதல்வர்? இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: