சென்னை: சென்னை, நுங்கம்பாக்கத்தில் திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்படத்தை திரையிடலுக்கு தொடரும் தடை குறித்து சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி மற்றும் கருணாஸ் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது: பதற்றங்களை தணித்து மக்களுக்கு இடையே இணக்கத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக ஜனநாயக சக்திகள் மீது நம்பிக்கை கொண்டவர்கள் எல்லாம் சேர்ந்து திருப்பரங்குன்றம் பைல்ஸ் என்ற ஆவணப்படத்தை எடுத்துள்ளனர். இதற்கு தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய இடையூறுகள் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.
காஷ்மீர் பைல்ஸ், கேரள பைல்ஸ் என்று உண்மைக்கு மாறான திரைப்படங்களை எடுத்தார்கள். அரசும், மக்கள் பிரதிநிதிகள் கடுமையாக எதிர்த்த, விமர்சித்த படங்களுக்கு இந்த நாட்டில் அனுமதி. ஆனால் இந்துகள், முஸ்லிம், கிறிஸ்தவர்கள் எல்ல மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதற்காக ஆவணப்படம் எடுத்துள்ளார்கள், அதற்கு பெரிய இடையூறு என்பதை ஜீரணிக்க முடியவில்லை.
20 பேர் கும்பல் அத்துமீறி வந்து ஆவணப்படத்தை திரையிடக்கூடாது என்ற துணிச்சல் எப்படி வந்தது. படம் குறித்து விமர்சனம் வைக்கலாம், தவறான கருத்துகள் இருந்தால் எதிர்ப்பு தெரிவிக்கலாம். ஆவணப்படத்தை எடுத்தவர்கள் கூட சட்ட ரீதியாக அணுகலாம் என்று தான் கூறுகின்றனர். எனவே 2 வாரங்கள் பொறுத்திருங்கள், முதல்வர் ஜோசப் விஜய் தலையிட்டு ஆவணப்படத்தை வெளியிட பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கி தர வேண்டும்.
முதல்வரின் கவனத்துக்கு தெரிந்து தான் ஆவணப்படம் திரையிடலை தடை செய்துள்ளார்களா? திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்படத்தில் மதங்களுக்கு எதிரான கருத்துகள் இல்லை, மதத்தின் பெயரால் அரசியல் செய்ய நினைப்பவர்களை இரும்புக் கரம் கொண்டு முதல்வர் அடக்க வேண்டும்.
