புதுடெல்லி: பிரதமருக்குப் பாதுகாப்பு அளிக்கும் சிறப்புப் பாதுகாப்புக் குழுவின் அடுத்த தலைவராக, மூத்த ஐபிஎஸ் அதிகாரி அமித் குமார் நியமிக்கப்பட்டார். பீகார் பிரிவைச் சேர்ந்த 1994ஆம் ஆண்டு தொகுதி இந்தியக் காவல் பணி அதிகாரியான அமித்குமார், தற்போது மத்திய ரிசர்வ் காவல் படையில் சிறப்பு இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். அவர் புதிய எஸ்பிஜி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 60 வயது பூர்த்தியடைந்த நிலையில் நேற்றுடன் ஓய்வுபெறவிருந்த தற்போதைய எஸ்பிஜி தலைவர் அலோக் சர்மாவுக்கு, கடந்த ஜூன் 24 அன்று எஸ்பிஜி தலைவராக மேலும் 9 மாத பணி நீட்டிப்பு வழங்கப்பட்டிருந்தது.
இதனால் அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதியுடன் அலோக்குமார் பணிக்காலம் முடிவடைந்த பிறகு, புதிய எஸ்பிஜி தலைவராக அமித்குமார் பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பு உடனடியாக அவரை எஸ்பிஜியில் சிறப்புப் பணி அதிகாரியாக நியமிப்பதற்கு அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாகப் பணியாளர் நல அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் ெதாிவிக்கப்பட்டுள்ளது.
பதவி நீட்டிப்பு: நேரடி வரிகளுக்கான மத்திய வாரிய தலைவர் ரவி அகர்வாலின் பதவிக்காலத்தை மீண்டும் ஆறு மாதங்களுக்கு, அதாவது வருகிற டிசம்பர் மாதம் வரை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. 1988ஆம் ஆண்டு பிரிவு இந்திய வருவாய் சேவை அதிகாரியான இவரின் நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் நேற்று முடிவடையவிருந்தது. தற்போது அடுத்த உத்தரவு வரும் வரை அல்லது ஆறு மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் சிபிடிடி தலைவராக ரவி அகர்வாலை மறுநியமனம் செய்ய ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது அவருக்கு 2வது பதவி நீட்டிப்பு ஆகும்.
