சிபிஎஸ்இக்கு தகவல் ஆணையம் உத்தரவு மதிப்பெண், விடைத்தாள் நகல் வழங்க காலக்கெடு

புதுடெல்லி: கொரானோ பரவல் காரணமாக 2021ல் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், தேர்வு முடிவுகளை தயாரிக்க சிபிஎஸ்இ குறிப்பிட்ட மதிப்பீட்டு நடைமுறையை கையாண்டது. இதில் தனது மதிப்பெண்களை தயாரித்த மதிப்பீட்டு ஆவணங்களை கேட்டு 12ம் வகுப்பு மாணவி ஒருவர் ஆர்டிஐ சட்டத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். மதிப்பீட்டு செயல்முறையில் ஏற்பட்ட பிழை தனக்கு மனஉளைச்சலையும் சோர்வையும் ஏற்படுத்தியதாகவும் அதற்காக சிகிச்சை பெற வேண்டியிருந்ததாகவும் கூறியிருந்தார். இதுதொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் மாணவியின் மனுவுக்கு சிபிஎஸ்இ பதிலளிக்க மறுத்துவிட்டது.

இதை எதிர்த்து மாணவி தரப்பில் மத்திய தகவல் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த தகவல் ஆணையர் சுதா ராணி ரெலாங்கி, ‘‘மாணவர்களின் கோரிக்கையின் பேரில் மதிப்பெண்கள், விடைத்தாள்களை வழங்குவதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்கும் நிலையான செயல்பாட்டு நடைமுறையை சிபிஎஸ்இ அமல்படுத்துவது தற்போதைய சூழலில் மிகவும் அவசியமான ஒன்று’’ என கூறியதுடன், மாணவியின் மதிப்பீட்டு அறிக்கையை வழங்க உத்தரவு பிறப்பித்தது.

Related Stories: