தமிழகத்தில் 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழகத்தில் 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. சென்ன பாலவாக்கத்தில் நடந்த சிறப்பு முகாமை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் 5 வயதிற்குட்பட்ட 52.91 லட்சம் குழந்தைகளுக்கு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டு இருந்தது.

குறிப்பாக, பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சுங்கச் சாவடிகள், சோதனைச் சாவடிகள் மற்றும் விமான நிலையங்களில் தற்காலிக மையங்கள் அமைக்கப்பட்டு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. சென்னை பாலவாக்கம், அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமை முதலமைச்சர் விஜய் நேற்று தொடங்கி வைத்தார்.

மேலும் நேற்று மற்றும் இன்று ஆகிய இரண்டு நாட்களில் தற்காலிக மையங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். பிற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டில் வசிக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும், போலியோ சொட்டு மருந்து முகாம்களில் வழங்கப்படும்.

இந்த பணிகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிகழ்ச்சியில், மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ், சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

* 51 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து
தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நேற்று நடத்தப்பட்டன. அதன்படி, 52,91,093 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 51 லட்சத்து 86 ஆயிரத்து 792 (98.09%) குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கப்பட்டதாக சுகாதாரத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: