சென்னை: திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகிய நிலையில், முன்னாள் அமைச்சரும் அரியலூர் மாவட்ட திமுக செயலாளருமான சிவசங்கர் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: திமுக தயவு இல்லாமல், தலைவர் கலைஞரின் தயவு இல்லாமல் வைகோ வளர்ந்தார் என சிலர் பேசுகின்ற செய்தியை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய இடத்தில் நாங்கள் இருக்கிறோம். வைகோவின் வரலாறு தெரியாமல் மதிமுகவில் இருக்கின்ற சிலர் பேசலாம். ஆனால் திமுகவில் இருப்பவர்கள், மதிமுகவின் வரலாறு அறிந்தவர்கள்.
வைகோ நாடாளுமன்றத்தில் போய் கர்ஜித்த பிறகுதான் வைகோ என்ற அடையாளம் கிடைத்தது. ஆனால், அந்த நாடாளுமன்றத்திற்கு வைகோவை அனுப்பியது யார் எனில்? கலைஞர் தான். அதுவும் ஒருமுறை அல்ல, இருமுறை அல்ல, மூன்று முறை. நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக… ஆனால், அதற்கு நன்றியாக அவர் மதிமுகவை ஆரம்பித்து, திமுகவை பிரித்தார்.
அதற்கான பலன்களை தொடர்ந்து, அவர்களே பார்த்துக் கொண்டுள்ளனர். 4 முறை திமுக எந்த சிறு சங்கடமும், தேர்தல் சிரமமும் இல்லாத அவரை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக ஆக்கி அழகு பார்த்தது. மதிமுக என ஒன்றை ஆரம்பித்து 1996ல் ஒட்டுமொத்தமாக 234 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்ததே அவருக்கு கிடைத்த பரிசு. இன்னும் சொல்லப்போனால் வைகோவின் மிச்ச வரலாற்றை நாங்கள் சொல்வதை விட, மதிமுகவிலிருந்து வெளியே வந்துள்ள மூத்த தலைவர்களை கேட்டாலே தெரியும்.
வைகோ பொடோ வழக்கிலிருந்து விடுதலையாக போராடியவர், முத்தமிழறிஞர் கலைஞர். அந்த பொடோ வழக்கில் வைகோவுடன் உடன் இருந்தவர்கள் மரியாதைக்குரிய செவ்வந்தியப்பன், அழகுசுந்தரம், செங்குட்டுவன் அனைவரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தங்களை திமுகவில் இணைத்து கொண்டுள்ளனர். இவர்கள் தான் மதிமுகவின் தூண்களாக உடன் இருந்தவர்கள்.
இதற்கு மேலும் பேசினால் வைகோவின் துவக்க காலத்தில் அந்த பயணத்தை துவங்கிய போது, தலைவர் கலைஞர் பேசுகிறபோது மேடையில் காலடியில் அவர் அமர்ந்திருந்த காட்சிகளை நேரடியாக பார்த்த சாட்சிகள் எல்லாம் உள்ளனர். அவர்களெல்லாம் பேச ஆரம்பித்தால், மதிமுகவின் மொத்த வரலாறும் முடிந்துவிடும். ஆகவே மதிமுகவினருக்கு அன்போடு சொல்லிக் கொள்கிறேன்.
போய்ட்டீங்க விஜய் படத்தை பார்த்துட்டு ‘விசில்’ அடிங்க, மகிழ்ச்சியா இருங்க, ‘வைப்’ ஆகுங்க. அந்த படத்தில் வருகின்ற பாடலை கேட்டு உயர்கல்வித்துறை அமைச்சர் காங்கிரஸ் விஸ்வநாதன் ‘டான்ஸ்’ ஆடியதுபோல் நடனமாடி மகிழ்ச்சியாக இருங்கள். தேவை இன்றி திமுகவினரை விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள். இவ்வாறு அந்த காணொலியில் தெரிவித்துள்ளார்.
