யூடியூப் மூலம் மருமகளுக்கு பிரசவம் பார்த்த மாமியார்

பெருந்துறை: யூடியூப் பார்த்து மருமகளுக்கு மாமியார் பிரசவம் பார்த்ததால் ஆபத்தான நிலையில் மருமகள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே புஞ்சை தளவாய்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குழந்தைசாமி (36). இவரது மனைவி சசிகலா (32), தம்பதியர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், மீண்டும் சசிகலா கர்ப்பமானார்.

கர்ப்பமான நாளில் இருந்து எந்த டாக்டரையும் பார்க்காமலும், தடுப்பூசி போடாமலும் யூடியூப்பில் வரும் வீடியோவை பார்த்து இயற்கை முறையில் குழந்தையை பெற்றெடுக்க இவரது மாமியார் பழனியாத்தாள் (56) மற்றும் குடும்பத்தினர் விரும்பியுள்ளனர். இந்நிலையில், சசிகலாவுக்கு 40 வாரங்கள் ஆன நிலையில் கடந்த 24ம் தேதி அதிகாலை 5.40 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஆனால், சசிகலாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் வீட்டிலேயே மாமியார் பிரசவம் பார்த்ததில் பெண் குழந்தை பிறந்தது.

அன்று காலை 8.30 மணி வரை நஞ்சுக்கொடி வெளியேறாததால் அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சசிகலாவை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கும் சரியாகாததால் பெருந்துறை குன்னத்தூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது, சசிகலா பேச்சு மூச்சு இல்லாமல் இருந்துள்ளார்.

இதனால், வேறு வழியின்றி ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கும் ரத்தப்போக்கு அதிகமாக இருந்ததால் டாக்டர்கள் சசிகலாவின் கர்ப்பப்பையை அகற்றினர். 65 யூனிட் ரத்தம் வழங்கப்பட்டது. அதன் பிறகும் உடல்நிலை மோசமாக இருந்ததால் 25ம் தேதி மாலை 4.15 மணிக்கு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சசிகலாவை கொண்டு சென்றனர். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories: