காட்டுமன்னார்கோவில்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (40). இவர் அதே ஊரைச் சேர்ந்த அறிவழகன் மனைவி உமாதேவி பெயரில் நாரை ஏரி பகுதியில் வண்டல் மண் எடுப்பதற்கு 6 நாட்கள் வருவாய் துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த பகுதிக்கு சென்ற, தவெக கடலூர் தெற்கு மாவட்ட இணைச் செயலாளர் புலவேந்திரன் மற்றும் அவரது கூட்டாளிகள் வண்டல் மண் எடுக்க லஞ்சமாக ரூ.1 லட்சம் ‘பார்ட்டி பண்ட்’ கேட்டு மிரட்டி உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அவரது காரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதுடன், கட்சி மற்றும் தலைவர் விஜய்யின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, புலவேந்திரனை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக தவெக கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
புலவேந்திரன் மீது கட்சியினரிடமிருந்து பல்வேறு புகார்கள் வந்துள்ளதாகவும், பல இடங்களில் கையூட்டு பெற்று பதவி மற்றும் பொறுப்புகள் வழங்கியதாகவும் புகார்கள் எழுந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
