எஞ்சியுள்ள வாழ்வில் எவ்வித களங்கமும் சுமக்க வேண்டாம்: கடையநல்லூர் தொகுதி எம்எல்ஏ வைகோவுக்கு அட்வைஸ்

கடையநல்லூர்: மதிமுக பொதுக்குழுவில் பங்கேற்காத கடையநல்லூர் தொகுதி எம்எல்ஏ ராசேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில், எஞ்சியுள்ள நம் வாழ்வில் எவ்வித களங்கமும் சுமக்க வேண்டாம் என்று வைகோவுக்கு அட்வைஸ் செய்துள்ளார். இதுதொடர்பாக கடையநல்லூர் எம்எல்ஏ ராசேந்திரன் வெளியிட்ட அறிக்கை: வைகோவை உண்மையாக நேசிக்கிறேன்.

கட்சி, சாதி, மதம் கடந்து நம்மை வெற்றி பெறச் செய்த கடையநல்லூர் தொகுதி மக்கள் நாள்தோறும் என்னிடம் வெளிப்படுத்தி வரும் உணர்வினை மதித்தும், வைகோ மீதோ, எம்எல்ஏவான என் மீதோ களங்கம் படர்வதைத் தவிர்க்கும் பொருட்டும் பதவி விலகல் என்ற முடிவை மேற்கொள்ள வேண்டாம். தங்கள் அறிவுரைப்படி சட்டமன்றத்தில் கட்சி உணர்வோடு நான் இயங்கி வருவதையும், பேசியதையும் பாராட்டினீர்கள்.

எனது சட்டமன்றச் செயல்பாடுகள் தகுதி நீக்கத்திற்கு வழிவகுத்தால் மகிழ்ச்சியுடன் பதவியைத் துறந்து மக்களிடம் முறையிடுவோம். இப்போது அவசரம் வேண்டாம். குறைந்தபட்சம் ஆறு மாதம் பொறுத்து இருப்போம். கூட்டணி குறித்து கட்சி எடுக்கும் முடிவை மதிக்கிறேன். இந்த தகவல்களையும், இன்னும் சில பல செய்திகளையும் தாயகத்தில் வைகோவிடம் கண்ணீருடன் முறையிட்டேன்.

அதன் பின்னர் இரவு வைகோவிடம் இருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவை, பொதுக்குழுவில் என்னால் செயல்படுத்த இயலாது என்பதால் பொதுக்குழுவில் நான் கலந்து கொள்ளவில்லை என்பதை பொருளாளர் மூலம் தலைவர் கவனத்திற்கு சொல்லி உள்ளேன். 42 ஆண்டுகளாக வைகோ மீது நான் வைத்திருக்கும் அன்பும், விசுவாசமும் உண்மையானது.

அதேபோல் வாக்களித்த மக்கள் பெருமைப்படுகின்ற வகையிலும், வாக்களிக்காத மக்கள் இவருக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று நினைக்கிற வகையிலும் எனது செயல்பாடுகள் இருக்கும் என்று தொகுதி மக்களிடம் நானும், வைகோவும் பேசி ஏற்படுத்தி வைத்திருக்கும் நம்பிக்கையும் உண்மையானது. எஞ்சியுள்ள நம் வாழ்வில் எவ்வித களங்கமும் சுமக்க வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து. இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories: