சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை பெண்களுக்கு எதிரான அநீதியை வேடிக்கை பார்க்கிறது அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

நெல்லை: பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் நேற்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:  தமிழகத்தில் தற்போது நடக்கும் அரசியல் மக்களுக்கான கள அரசியல் அல்ல. அது முழுக்க முழுக்க ஸ்டூடியோவிற்குள் நடக்கும் அரசியல். அமைச்சர்களின் செயல்பாடுகள் ஏமாற்றமளிக்கும் வகையில் உள்ளன. குறிப்பாக, தமிழக அமைச்சரவையில் உள்ள முக்கிய அமைச்சர்கள் நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல், கையில் அலைபேசியை வைத்துக்கொண்டு மக்கள் பிரச்னைகளை திசைதிருப்பும் வகையில் தேவையற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

‘சிங்கப்படை’ அமைத்து பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவோம் என்று தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்த அரசு, தற்போது 17 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை பெண்களுக்கு எதிராக தொடர்ச்சியாக நடைபெறும் அநீதிகளையும், குற்றங்களையும் தடுத்து நிறுத்த முடியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசுடன் இணக்கமாக செல்வதாக அமைச்சர்கள் வெளியில் பேசினாலும், சட்டமன்றத்தில் அவர்கள் எதிர்க்கட்சிகளை நடத்தும் விதம், வஞ்சனையுடன் பேசுவது ஆகியவை ஏற்புடையதல்ல.

ஆதாரமில்லாமல் பேசும் அமைச்சர்களின் செயல்பாடுகளை பாஜ தொடர்ந்து கண்காணித்து எச்சரிக்கும். தமிழகத்தில் பாஜவின் வாக்கு வங்கி 11 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைந்திருப்பதாக சிலர் திட்டமிட்டு தவறான தகவல் பரப்பி வருகின்றனர். வரவிருக்கும் தேர்தல்களில் பாஜ தனது உண்மையான பலத்தை நிரூபித்துக் காட்டும். தேர்தல் போட்டி மற்றும் கூட்டணிகள் குறித்த இறுதி முடிவுகளை தேர்தல் தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் கட்சியின் தேசியத் தலைமை முறைப்படி அறிவிக்கும்.

திமுகவுடன் கூட்டணியா என்று கேட்கிறீர்கள். இது போன்ற கொள்கை மற்றும் கூட்டணி சார்ந்த விவகாரங்களில் கட்சியின் டெல்லி மேலிடமும், மக்களவை குழுவும் எடுக்கும் முடிவே இறுதியானது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளரை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிப்பது எந்த வகையில் நியாயம்.இவ்வாறு தெரிவித்தார்.

* மாத்திரையை அமைச்சர் பொடியாக்கியது யாருக்கு…?
நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில், தமிழக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கையில் ஒரு பொடியை வைத்து கசக்குகிறார். கேட்டால் அது குழந்தைக்கு மாத்திரையை பொடியாக்கி கொடுத்ததாக தெரிவிக்கிறார். ஆனால் அருகில் எந்தக் குழந்தையும் இல்லை என்று கூறினார்.

Related Stories: