திருப்புவனம்: கீழடியில் 11ம் கட்ட அகழாய்வு பணியின்போது சுடுமண் உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 10ம் கட்ட அகழாய்வு பணிகளில் சுமார் 13 ஆயிரம் தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. அவை கீழடி அருங்காட்சியகத்திலும், கண்டறியப்பட்ட சுடுமண் செங்கல் கட்டுமானங்கள் திறந்தவெளி அருங்காட்சியகமாக அமைக்கப்பட்டுள்ளன. 11ம் கட்ட அகழாய்வு கடந்த மார்ச் 18ம் தேதி துவங்கியது.
இதுவரை 9 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு நடந்து வருகின்ற நிலையில், நேற்று 9வது குழியில் சுடுமண்ணாலான உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்கு தொழிற்சாலை இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. கீழடியில் இதுவரை மட்கலம், கெண்டி மூக்கு மட்கலம், மூடியுடன் கொண்ட மட்கலம், சிறிய வாய்ப்பகுதி கொண்ட மண்பானை என அடுத்தடுத்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. தொடர் அகழாய்வில் இதுபோன்ற 2,600 ஆண்டுகள் பழமையான தொல்பொருட்கள் இன்னும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக தொல்லியல் துறை தரப்பில் கூறப்படுகிறது.
