நட்புக்கும், உறவுக்கும் அரசுப்பதவிகள் துணை முதல்வரா நடிகை திரிஷாவை அறிவிச்சாலும் ஆச்சரியப்படாதீங்க.. முன்னாள் அமைச்சர் உதயகுமார் கிண்டல்

மதுரை: நட்புக்கும், உறவுக்கும் அரசு பதவிகளை அள்ளிக் கொடுக்கும் முதல்வர் விஜய், திரிஷாவை கூட துணை முதலமைச்சராக அறிவித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை என உதயகுமார் கூறியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் நேற்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டை சாராத கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதியாக தவெக அரசு நியமித்து இருக்கிறது.

இதற்கு முன்பாக தனக்கு ஜாதகத்தை கணித்து கூறும் ராதன் பண்டிட்டை தனது அரசியல் ஆலோசகராக தவெக அரசு நியமனம் செய்து, கடும் விமர்சனங்கள் எழுந்ததற்கு பிறகு நியமனம் ரத்து செய்யப்பட்டது. அதற்குப் பிறகு தன்னுடைய மேனேஜர் ஜெகதீஷ் பழனிச்சாமி, தன்னுடைய வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோரை ‌அதிகாரப்பூர்வமான பவர் சென்டராக வைத்துக்கொண்டார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக வந்து விட்டதால், ஏதோ தமிழ்நாடு தனது அப்பன், தாத்தா வீட்டு சொத்தாகவும் வந்து விடுவதாக நினைக்கிறாரோ? தமிழகத்தினுடைய 8 கோடி மக்களின் உரிமை காக்கும் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்கிற பெருமை வாய்ந்த பதவியை, தன்னோடு பழகியவர்கள் என்கிற காரணத்தினாலே திரைப்படங்களில் முக்கிய ரோல் தருவதைப் போல வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் உரிமையை டெல்லியில் நிலைநாட்டிட கர்நாடகாவை சேர்ந்த பிரபல சினிமா பட தயாரிப்பாளர் வெங்கட் நாராயணாவை தவெக அரசு நியமித்திருக்கிறது.

ஒன்று புரிகிறது. விஜய்யை வைத்து படம் எடுத்தவர்கள், தன் படத்தில் நடிப்பவருக்கு, மேனேஜர்களான ஜெகதீஷ் பழனிச்சாமி, ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணுரெட்டி, ராதன் பண்டிட், வெங்கட் நராயணா இப்படி எல்லோருக்கும் அரசு பதவி வழங்கிய முதல்வர் விஜய், நட்புக்கும், உறவுக்கும் இலக்கணமாக இருக்கின்ற பிரபல திரைப்பட கதாநாயகி திரிஷாவைக் கூட துணை முதல்வராக்கி விரைவிலே அறிவிப்பு வெளிவரலாம். முதல்வர் விஜய் இதனை எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கலாம் என்கிற அதிர்ச்சியிலே தமிழ்நாடு உறைந்து போயிருக்கிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: