பெல்ஃபாஸ்ட்: இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டி.20 போட்டிகளில் ஆடுகிறது. இதில் நேற்று நடந்த முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த அயர்லாந்து 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன் குவித்தது. கேப்டன் லோர்கன் டக்கர் 50, கேரத் டெலானி 49 ரன் அடித்தனர். பின்னர் களம் இறங்கிய இந்திய அணியில் அபிஷேக் சர்மா 49, சிவம் துபே 25, திலக்வர்மா 19, அக்சர் பட்டேல் 15 ரன் அடிக்க மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆகினர்.
18.5 ஓவரில் 148 ரன்னுக்கு இந்தியா ஆல்அவுட் ஆனது. இதனால் 34 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்து வெற்றிபெற்றது. உலக சாம்பியனான இந்தியாவை அயர்லாந்து முதன்முறையாக வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. கேப்டனாக தனது முதல் போட்டியிலேயே தோல்வி அடைந்த ஸ்ரேயாஸ் கூறியதாவது: ”ஆரம்பத்தில், எங்கள் பவுலர்கள் மிகச் சிறப்பாகவும் வீரியத்துடனும் வீசினர். ஆனால் இடையில் எங்கள் திட்டத்தைச் சரியாகச் செயல்படுத்தத் தவறிவிட்டோம். பந்துவீச்சில் எங்களுக்குக் கிடைத்த தொடக்கத்தை பார்த்தபோது, 140 ரன் என்பது துரத்துவதற்குச் சாதகமான இலக்காக இருந்திருக்கும்.
இருந்தாலும், ஒரு கேப்டனாக இது ஒரு சிறந்த தொடக்கம் தான் (சிரிக்கிறார்). நடந்தவற்றை மறந்துவிட்டு, இந்தப் போட்டியிலிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவிருக்கிறோம். அடுத்த போட்டியில் முழு வீச்சில் களமிறங்கத் தயாராக இருக்கிறோம். எதையும் சாதாரணமாகவோ அல்லது எளிதாகவோ எடுத்துக்கொள்ளக் கூடாது. களத்தில் இறங்கி கடுமையாக உழைக்க வேண்டும்” என்றார்.
2வது மற்றும் கடைசி போட்டி நாளை இதே மைதானத்தில் நடக்கிறது.
