நியூயார்க்: 48 அணிகள் பங்கேற்றுள்ள 23வது பிபா உலக கோப்பை கால்பந்து தொடரில் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஐ பிரிவில் அமெரிக்காவின் போஸ்டன் மைதானத்தில் நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கி நடந்த போட்டியில் முன்னாள் சாம்பியனான பிரான்ஸ்-நார்வே அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே பிரான்ஸ் ஆதிக்கம் செலுத்தியது. நட்சத்திர வீரர் உஸ்மான் டெம்பேலே 7, 20 மற்றும் 32வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார். இது உலகக் கோப்பை வரலாற்றில் 2வது மிக அதிவேகமான ஹாட்ரிக் கோல் சாதனையாகப் பதிவாகியுள்ளது.
நார்வே நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலாண்ட் இந்த போட்டியில் விளையாடாத நிலையில், அந்த அணியின் தேலோ அஸ்கார்ட் முதல் பாதியில் ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். 2வது பாதியில் ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் (90+4’ நிமிடம்) பிரான்ஸ் இளம் வீரர் டிசைர் டோவோ ஹெட்டர் மூலம் கோல் அடித்தார். முடிவில் 4-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வெற்றிபெற்றது. இந்த ஹாட்ரிக் வெற்றியின் மூலம் பிரான்ஸ் 9 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடம் பிடித்து ‘ரவுண்ட் ஆப் 32’ சுற்றுக்கு தகுதி பெற்றது. நார்வே தோல்வியடைந்தாலும் 2வது இடம்பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
