சென்னை: தமிழக சட்டப் பேரவை தேர்தலுக்கு பிறகு இதுவரை இல்லாத வகையில் வேட்பாளர்களின் வெற்றியை எதிர்த்து இதுவரை 55 தேர்தல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. ஒவ்வொரு சட்டப் பேரவை தேர்தல் முடிந்தவுடன் தேர்தல் வெற்றியை எதிர்த்து தோல்வியடைந்த வேட்பாளர்கள் தேர்தல் வழக்குகளை தொடர்வது உயர் நீதிமன்றத்தில் வழக்கமாக நடைபெறுவது தான். பெரும்பாலும் ஒவ்வொரு தேர்தலுக்கு பிறகும் அதிகபட்சம் 10 தேர்தல் வழக்குகள் தொடரப்பட்டு வந்தது.
2011 தேர்தலுக்கு பிறகு 12 தேர்தல் வழக்குகளும், 2016 தேர்தலுக்கு பிறகு 13 தேர்தல் வழக்குகளும் தொடரப்பட்டிருந்தன. ஆனால், தற்போது நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களை எதிர்த்து சுமார் 55 தேர்தல் வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜயின் வெற்றியை எதிர்த்து மட்டும் 3 தேர்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருச்சி கிழக்கு தொகுதியில் அவர் வெற்றி பெற்றதை எதிர்த்து ஒரு தேர்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்தும், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன், மரிய வில்சன் ஆகியோரின் வெற்றியை எதிர்த்தும் தேர்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை 55 தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்குகளுக்கான ஆவணங்கள் ஆய்வில் உள்ளன. அதன் பிறகு இந்த தேர்தல் வழக்குகள் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
