காவிரி, கோதாவரி இணைப்பு பணிகளை விரைவுபடுத்த தென் மாநில முதல்வர்கள் மாநாடு நடத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல், ஆந்திர முதல்வர் சந்திரபாடு நாயுடு, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.  அப்போது பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ‘‘காவிரி மற்றும் கோதாவரி இணைப்பு திட்டத்தை ஒன்றிய அரசின் திட்டமாக செயல்படுத்த வேண்டும்.

இதன் மூலம் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய 4 மாநிலங்கள் பயனடையும்’’ என்று கூறியிருக்கிறார். இந்த யோசனைக்கு தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி எதிர்ப்பு தெரிவிக்காதது மட்டுமின்றி, அனைத்து நதிநீர் சிக்கல்களுக்கும் விரைந்து தீர்வு காண வலியுறுத்தியுள்ளார். ஆற்று நீர் சிக்கல்களை தீர்ப்பதற்கான கருத்தொற்றுமை தென் மாநில முதல்வர்களிடம் ஏற்பட்டிருப்பது மிக முக்கியமான திருப்பம் ஆகும். இதே கருத்தொற்றுமை இல்லாததால் தான் காவிரி, கோதாவரி இணைப்பு திட்டம் முடங்கி கிடக்கிறது.

நதி நீர் சிக்கல்களை தீர்ப்பது, நதிகளை இணைப்பது ஆகியவற்றுக்கு ஆதரவான சூழல் தென் மாநிலங்களின் முதல்வர்களிடம் ஏற்பட்டுள்ள நிலையில், அதைப் பயன்படுத்தி இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். கோதாவரி மற்றும் காவிரி இணைப்பை ஒருங்கிணைக்கும் பணி தேசிய நீர் மேம்பாட்டு முகமை என்ற அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த முகமைக்கு ஏராளமான பிற பணிகள் இருப்பதால், இப்பணியை திறம்பட மேற்கொள்ள இயலாது.

எனவே, இந்தப் பணிகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் ஒருங்கிணைத்து செயல்படுத்த சிறப்பு பணிக்குழுவை அமைக்க வேண்டும். அத்துடன் இந்தத் திட்டத்துடன் சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்கள் மாநாட்டை பிரதமர் தலைமையில் நடத்தி கருத்தொற்றுமை ஏற்படுத்தவும், அதைத் தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்து காவிரி மற்றும் கோதாவரி இணைப்பு பணிகளை தொடங்கவும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: